

வாஷிங்டன்
இந்திய அரசு பொருளாதாரத்தின் அடிப்படை கட்டமைப்புகளில் பணியாற்றுகிறது, ஆனால், நீண்டகாலத்துக்கு வளர்ச்சியை தூண்டிவிடும் காரணிகளில் உள்ள பிரச்சினைகளைக் கண்டுபிடித்துத் தீர்வு காண்பது அவசியம் என்று சர்வதேச நிதியம்(ஐஎம்எப்) தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 7.3 சதவீதமாகக் கடந்த ஏப்ரல் மாதம் ஐஎம்எப் கணித்திருந்தது.
ஆனால், இந்தியாவில் கடந்த இரு காலாண்டுகளாகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வளர்ச்சிக் குறைவு, ஆட்டோமொபைல் விற்பனை கடந்த 11 மாதங்களாகக் குறைந்து வருவது, மக்களின் நுகர்வு சக்தி குறைவு, முக்கிய எட்டு துறைகளின் செயல்பாடு மந்தம் ஆகியவற்றால் பொருளாதாரத்தில் வளர்ச்சிக் குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து, நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 6.1 சதவீதமாகக் குறைத்துக் கடந்த சில நாட்களுக்கு முன் ஐஎம்எப் கணிப்பு வெளியிட்டது.
2020-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்றும் உலக நாடுகளைப் பொறுத்தமட்டில் வேகமாக வளரும் பொருளாதாரத்தை இந்தியா இன்னும் கொண்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஐஎம்எப் அமைப்பின் மேலாண் இயக்குநர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், " பொருளாதாரத்தின் அடிப்படையான விஷயங்களில் இந்தியா நன்றாக வேலை செய்து வருகிறது. ஆனால், அதில் இருக்கும் சில பிரச்சினைகளை அடையாளம் கண்டு தீர்வுகாண்பது அவசியம். நிதித்துறையில் குறிப்பாக வங்கி அல்லாத நிறுவனங்களை, வங்கியுடன் ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பது கண்டிப்பாக அவசியம்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு நீண்டகாலத்துக்கு உதவும் காரணிகளில் உள்ள பிரச்சினைகளைக் கண்டறிந்து தீர்ப்பது மிகவும் முக்கியம். மனித மூலதனம் மீது முதலீடு செய்வது முன்னுரிமையாகும்.
பெண்களை அதிகமான அளவு பணிக்குள் கொண்டுவருவது மிகவும் முக்கியம். இந்தியாவில் புத்திசாலியான, திறமைமிக்க பெண்கள் இருக்கிறார்கள், ஆனால், அவர்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள்.
கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் மிக வலிமையான வளர்ச்சி காணப்பட்டது, அதனால்தான் இந்தியாவின் வளர்ச்சியை நாங்களும் ஸ்திரமான வளர்ச்சி இருக்கும் என்று கணித்தோம்.
உலகின் மற்ற நாடுகளைப் போல் இந்தியாவும் பொருளாதார வளர்ச்சிக் குறைவை அனுபவித்து இருக்கிறது. 6 சதவீதத்துக்கும் சற்றே அதிகமான பொருளாதார வளர்ச்சி நடப்பு ஆண்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் இந்திய அரசு மேற்கொள்ள முன்னுரிமை அளிக்க வேண்டும், அதுபோன்ற சீர்திருத்தங்களைத்தான் எதிர்பார்க்கிறோம் " எனத் தெரிவித்தார்
பிடிஐ