

நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 9 லட்சம் புதிய முதலீட்டாளர்கள் மியூச்சுவல் பண்ட் கணக்கினை தொடங்கி இருக்கிறார்கள். செபி தகவலின்படி கடந்த நிதி ஆண்டின் முடிவில் 31,691,619 மியுச்சுவல் பண்ட் கணக்குகள்(பங்கு சார்ந்த) இருந்தன.
ஜூன் காலாண்டு முடிவில் 32,580,508 கணக்குகளாக உயர்ந் துள்ளன. முதல் காலாண்டில் கூடுதலாக 8.8 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.
கடந்த 2008-ம் ஆண்டு பொருளாதார நெருக்கடி வந்த பிறகு முதலீட்டாளர்கள் தங்களது மியூச்சுவல் பண்ட் கணக்குகளை தொடர்ந்து முடித்துக்கொண்டே வந்தார்கள். மார்ச் 2009-ம் ஆண்டு முதல் சுமார் 1.5 கோடி கணக்குகளில் இருந்து பணம் எடுக்கப்பட்டது.
கடந்த 2014-15ம் நிதி ஆண்டுக்கு முன்பு புதிய கணக்குகள் தொடங்குவது மந்தமாகவே இருந்தது.
கடந்த ஒரு வருடமாக பங்குச் சந்தையில் ஏற்றம் இருப்பதால் முதலீட்டாளர்கள் மியுச்சுவல் பண்ட் முதலீட்டில் கவனம் செலுத்தி வருகிறார்கள். புதிய முதலீட்டாளர்களின் வருகையால் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் முதல் காலாண்டில் 33,000 கோடி ரூபாய் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளன.
16 லட்சம் முதலீட்டாளர்கள்
கடந்த ஒரு வருடமாக பங்குச் சந்தை உயர்ந்து வருவதால் 16 லட்சம் சிறுமுதலீட்டாளர்கள் டிமேட் கணக்கு தொடங்கி பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக் கிறார்கள். கடந்த ஜூன் மாத முடிவில் 2.37 கோடி கணக்குகள் இருந்தன. ஒரு வருடத்துக்கு முன்பு 2.2 கோடி கணக்குகள் மட்டுமே இருந்தன.
2013 ஜூன் முதல் 2014 ஜூன் வரை 8.3 லட்சம் டிமேட் கணக்குகள் தொடங்கப்பட்டன.
சாதகமான பங்குச்சந்தை சூழ்நிலை, தொடர்ந்து வெளியாகும் ஐபிஓ ஆகிய காரணங்களால் சிறுமுதலீட்டாளர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் என்று பங்குச் சந்தை வல்லுநர்கள் தெரிவித் தார்கள்.