

புதுடெல்லி
கஃபே காபி டே நிறுவனர் சித்தார்த்தா மீதான வழக்கில் வருமான வரித்துறை சட்ட விதிக்கு உட்பட்டே செயல்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஃபே காபி டே நிறுவனத்தின் தலைவர் வி ஜி சித்தார்த்தா நேற்று மாயமானார். அவர் விட்டுச் சென்ற கடிதத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் அவருக்கு கடுமையான தொந்தரவு அளித்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் அந்தக் குற்றச்சாட்டை வருமான வரித்துறை தரப்பு மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அவருடைய அந்தக் கடிதத்தில் ‘அனைத்து செயல்பாடுகளும் முறையாக மேற்கொள்ளப்பட்ட பின்னும் மைண்ட் ட்ரீ பரிவர்த் தனையில் வருமான வரித்துறை கடுமையான தொந்தரவு அளித்தது. கஃபே காபி டே பங்குகளை கைப்பற்ற பல்வேறு சதிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த இரண்டு சமயங்களில் கடுமையான மன அழுத்தத்துக்கு உள்ளாக்கப் பட்டேன். இந்த முறையற்ற செயல்களால் கடுமையான பொருளாதாரச் சிக்கலுக்கு தள்ளப்பட்டேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
சித்தார்த்தா மீதான விசாரணை சட்டவிதிக்கு உட்பட்டே மேற் கொள்ளப்பட்டிருக்கிறது. மைண்ட் ட்ரீ நிறுவனத்தை விற்றதன் மூலம் அவர் ரூ.3,200 கோடி பெற்றார். அதற்கு செலுத்தவேண்டிய வரித் தொகையான ரூ.300 கோடிக்கு ரூ.46 கோடி மட்டுமே செலுத்தியுள்ளார். அவர் மீது முறையான விசாரனையைத் தவிர எந்த நெருக்கடியையும் வருமான வரித் துறை அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைண்ட் ட்ரீ நிறுவனத்தில் உள்ள ரூ.3,200 கோடி மதிக்கத்தக்க தனது 20.32 சதவீத பங்குகளை கடந்த மார்ச் மாதம் எல் அண்ட் டி நிறுவனத்துக்கு விற்றார். அதன் மூலம் பெற்ற தொகையைக் கொண்டு ரூ.2,900 கோடி அளவி லான அவருடைய கடன்களை அடைத்தார்.
மைண்ட் ட்ரீ நிறுவனத்தில் உள்ள அவருடைய பரிவர்த்தனை தொடர்பாக வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தன. தற்போது அவர் மாயமாகி உள்ள நிலையில் அவருடைய கடிதம் விவாதத்தைகிளப்பியுள்ளது.
கஃபே காபி டே நிறுவனத்தின் பங்கு மதிப்பு இதுவரை இல்லாத அளவில் நேற்று 20 சதவீதம் சரிந்து ரூ.154.05 க்கு வர்த்தகமானது.