

புதிய கருப்பு பண சட்டத்தின்படி, அடுத்த நிதியாண்டு முதல் வருமான வரித் துறையினர் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்காவிட்டால் ரூ. 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் கருப்புப் பணத்தை பதுக்குவதைத் தடுக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியிருந்தார்.
இதன்படி, கருப்பு பணம் (தெரிவிக்கப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துகள்) மற்றும் வரி விதிப்பு சட்டம் 2015, கடந்த மே 13-ம் தேதி அன்று மாநிலங்களவையில் நிறைவேறியது. அடுத்த இரண்டு நாட்களில் மக்களவையிலும் நிறைவேறியது. இதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்து விட்டார்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள இந்த சட்டத்தின்படி, வருமான வரித்துறையினரின் கேள்விக்கு சரியான பதில் அளிக்காதவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.50,000-மும் அதிகபட்சம் ரூ.2 லட்சமும் அபராதம் விதிக்க முடியும்.
வருமான வரித் துறையினர் கேட்கும் ஆவணங்களை சமர்ப்பிக்காவிட்டாலோ அல்லது சமர்ப்பிக்கும் ஆவணங்களில் முறையாக கையெழுத்திடாவிட்டாலோ கூட அபராதம் விதிக்கப்படும். இந்த சட்டத்தின்படி, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அஞ்சல், கொரியர், இ-மெயில் அல்லது பேக்ஸ் என மத்திய நேரடி வரிகள் வாரியத்தால் (சிபிடிடி) அங்கீகரிக்கப்பட்ட வழிமுறையின்படி சம்மன் அனுப்ப முடியும்.
எனினும், வெளிநாட்டு வங்கிகளில் உள்ள முதலீடு, சொத்து பற்றி தாமாக முன்வந்து தெரிவிப்பதற்கு கால அவகாசம் வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது. இதன்படி, இந்த சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு, இதுவரை கணக்கில் காட்டாமல் வெளிநாட்டில் வைத்துள்ள சொத்துகளுக்கு 30 சதவீத வரியும் 30 சதவீத அபராதமும் செலுத்தி கணக்கில் கொண்டுவந்துவிடலாம். இதற்கான கால அவகாசம் குறித்து மத்திய அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடும்.
இந்த கால அவகாம் முடிந்த பிறகு, ஒருவருக்கு வெளிநாட்டில் சொத்து இருப்பது தெரியவந்தால், அதன் மீது 30 சதவீத வரி செலுத்துவதுடன், வரித் தொகையைப் போல 3 மடங்கு அபராதம் செலுத்த நேரிடும். மேலும் குற்ற வழக்கையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதன்படி 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க இந்த சட்டத்தில் இடம் உள்ளது.