இந்தியன் ஆயில், என்டிபிசி பங்குகள் விலக்கம்: மத்திய அரசு ஒப்புதல்

இந்தியன் ஆயில், என்டிபிசி பங்குகள் விலக்கம்: மத்திய அரசு ஒப்புதல்
Updated on
1 min read

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 10 சதவீதப் பங்குகள் மற்றும் என்டிபிசி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விலக்கிக் கொள்ள மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பங்கு விற்பனை மூலம் ரூ. 15,000 கோடி நிதி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

இது தொடர்பாக தகவல் தெரிவித்த அரசின் மூத்த அதிகாரி பொருளாதார விவகாரத்துறை அமைச்சகத்தின் கூட்டத்தில் இந்த இரண்டு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரி வித்தார்.

பங்கு விலக்கல் துறை இந்த பங்குகளை விற்பனை செய்வதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளது, பங்கு விற்பனை நாள், விலை மற்றும் எந்த பங்குகளை விற்பனை செய்வது என்பதை முடிவு செய்துள்ளது. இந்த இரண்டு பங்கு விற்பனை முறையும் ஆபர் பார் சேல் அல்லது ஏல முறையில் விற்பனை செய்யப்படலாம். சில்லரை முதலீட்டாளர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிகிறது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனப் பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் ரூ. 5.65 (0.80%) ஏற்றம் கண்டு ரூ.335 என்கிற விலையில் முடிந்துள்ளது

என்டிபிசி பங்கு 2.29 சதவீதம் (ரூ.3.25) சரிந்து வர்த்தகத்தின் முடிவில் ரூ. 138.40 என்கிற விலையில் இருந்தது. வர்த்தகத்தின் இடையில் இந்த பங்கு ரூ.142.60 வரை ஏற்றம் கண்டிருந்தது. குறைந்தபட்சமாக 134 ரூபாய் வரை சரிந்தது.

அரசு வசம் என்டிபிசி நிறுவனத்தின் 74.96 சதவீத பங்குகள் உள்ளது. அதேபோல இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் அரசுக்கு 68.57 சதவீத பங்குகள் உள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் பங்கு விலக்கல் மூலம் 41,000 கோடி ரூபாயை திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

13 மாதங்களில் இரண்டாவது முறையாக ஐஓசி பங்கினை விலக்கிக்கொள்ள அரசு முடிவெடுத்திருக்கிறது. தற்போதைய சந்தையில் விலையில் பார்க்கும்போது ஐஓசி நிறுவனத்தின் பத்து சதவீத பங்குகள் மூலம் 8,000 கோடி ரூபாய் திரட்ட முடியும்.

அதே போல என்டிபிசி நிறுவனத்தின் ஐந்து சதவீத பங்குகளின் தற்போதைய மதிப்பு 5,600 கோடி ரூபாயாகும். கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் என்டிபிசி நிறுவனத்தின் சில சதவீத பங்குகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in