

கமாடிட்டி சந்தையை ஒழுங்குமுறை படுத்த எப்.எம்.சி என்னும் பார்வேர்ட் மார்க்கெட்டிங் கமிஷன். பங்குச்சந்தையை நெறிப்படுத்த செபி என்னும் இன்னொரு ஒழுங்குமுறை ஆணையம் இருக்கிறது. ஒரு வருடங்களுக்கு முன்பு நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்சில் 5,574 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்தது. இந்த சமயத்தில் இரண்டு ஒழுங்குமுறை ஆணையங்களையும் இணைக்க வேண்டும் என்ற பேச்சு எழுந்தது.
பிப்ரவரி 16-ம் தேதி ``பிஸினஸ் லைன்’’ ஆங்கில நாளிதழில் இந்த இணைப்பு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கணிக்கப்பட்டிருந்தது. அதுபோலவே பட்ஜெட்டில் இந்த இணைப்புக்கான அறிவிப்பை ஜேட்லி வெளியிட்டார்.
இந்த இரண்டு ஒழுங்குமுறை ஆணையங்களும் இணையும்போது முறைகேடுகளைத் தடுக்கமுடியும் என்று பட்ஜெட் உரையில் அருண் ஜேட்லி தெரிவித்தார். மேலும் முறைகேடாக நடக்கும் ’டப்பா வர்த்தகம்’ இந்த இணைப்பு மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று எதிர்பார் க்கப்படுகிறது. குஜராத் உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் இந்த முறைகேடான வர்த்தகம் நடைபெறுகிறது. இந்த தொகை மட்டும் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. கமாடிட்டி சந்தையில் 50,000 முதல் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரையிலும், பங்குச்சந்தையில் சில பத்தாயிரம் கோடிகளிலும் இந்த முறைகேடான வர்த்தகம் நடைபெறுகிறது.
நிதி மசோதாவில் இதற்குத் தேவையான மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா மே மாதத்தில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு இணைப்பு நடவடிக்கைகள் நடைபெறும்.
இந்த இணைப்பு மூலம் பங்குச்சந்தை, கரன்ஸி சந்தை, கமாட்டிட்டி சந்தை ஆகிய அனைத்து வர்த்தக நடவடிக்கைகளும் ஒரே ஒழுங்குமுறை ஆணையம் மூலம் கண்காணிக்கப்படும். அதனால் முதலீடுகள் உள்ளே வருவது மற்றும் வெளியேறுவதைக் கண்காணிக்க முடியும். அதே போல கமாடிட்டி டெரிவேட்டிவ் சந்தையில் புதிய வர்த்தக வாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இணைப்பு பங்கு தரகர்களுக்கும் சாதகமானதாக இருக்கும். ஒரே ஒழுங்கு முறை ஆணையமாக இருக்கும்போது பல அலுவலகங்களுக்கு செல்வது, பல விண்ணப்பங்களுக்காக செலுத்தும் கட்டணமும் குறையும். இந்த இணைப்பு பெரிய மாற்றத்தை உருவாகும் வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதனால் கமாடிட்டி சந்தைகளின் வர்த்தகம் அடுத்த கட்டத்துக்கு செல்லும். தவிர வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என்று அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இருந்தாலும், இணைப்புக்கு இந்த இரு அமைப்புகளும் தயராக இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. துறை சார்ந்த அறிவு, ஆட்கள் உள்ளிட்ட விஷயங்கள் தயாராக இருக்கிறதா என்பது ஆராயப்பட வேண்டியது.
1953-ம் ஆண்டு எம்.எம்.சி. உருவாக் கப்பட்டது. இந்த அமைப்பு கமாட்டிட்டி சந்தையை கவனிக்கும் ஒரு அமைப்பாகும். ஆரம்பத்தில் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இந்த அமைப்பு இருந்தது. 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம்(எஸ்.என்.இ.எல். முறைகேட்டுக்கு பிறகு) நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இது வந்தது.
நிதி சேவைகள் சீர்திருத்த குழு (எப்.எஸ்.எல்.ஆர்.சி.) செபி(பங்குச்சந்தை), ஐஆர்டிஏ(இன்ஷூரன்ஸ்), எப்.எம்.சி.(கமாடிட்டி சந்தை) மற்றும் பி.எப்.ஆர்.டி.ஏ (பென்ஷன்) ஆகிய அனைத்து ஒழுங்குமுறை ஆணையங்களையும் இணைத்து ஒருங்கினைந்த நிதி அமைப்பு (யூ.எப்.ஏ) உருவாக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
எம்.சி.எக்ஸ் பங்கு உயர்வு
இந்த இணைப்பு குறித்து அறிவிப்பு வெளியான உடனே எம்.சி.எக்ஸ் பங்கு வேகமாக உயர்ந்தது. வர்த்தகத்தின் இடையே 15 சதவீதம் அளவுக்கு உயர்ந்த இந்த பங்கு, முடியும் போது 12.86% உயர்ந்து 1,189 ரூபாயில் முடிவடைந்தது.