

வெளிநாட்டு மியூச்சுவல் பண்ட் நிறுவனமான ஜேபி மார்கன், இந்திய பிரிவை விற்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இந்த நிறுவனம் 14,000 கோடி ரூபாய் சொத்துகளை கையாளுகிறது.
இந்த பிஸினஸை விற்பதற்கான ஆரம்பகட்ட வேலைகளை ஜேபி மார்கன் செய்ய தொடங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவிக்க ஜேபி மார்கன் மறுத்துவிட்டது. வதந்தி மற்றும் யூகங்களுக்கு பதில் கூற இயலாது என்று ஜேபி மார்கன் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்த தொழிலில் இருந்து ஒரு வேளை இந்த நிறுவனம் வெளியேறு மானால் சமீப காலங்களில் மியூச்சுவல் பண்ட் தொழிலில் இருந்து வெளியேறிய நான்காவது வெளிநாட்டு நிறுவனமாக ஜேபி மார்கன் இருக்கும்.
இந்தியாவில் மொத்தம் 45 மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் கையாளும் மொத்த சொத்து மதிப்பின் அளவு ரூ.12 லட்சம் கோடியாக இருக்கிறது. இதில் பெரும்பாலான நிறுவனங்கள் குறைந்த நிதியையே கையாளு கின்றன.
இதில், ஹெச்.டி.எப்.சி., ரிலையன்ஸ், ஐசிஐசிஐ மற்றும் பிர்லா ஆகிய நான்கு மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் மட்டுமே ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேலான நிதியை கையாளுகின்றன.
ஜேபி மார்கன் நிறுவனம் இந்தியாவில் செயல்பாட்டினை தொடங்க பிப்ரவரி 2007-ம் ஆண்டு செபி அனுமதி கொடுத்தது.
2013-ம் ஆண்டு டிசம்பர் முதல் இதுவரை மூன்று வெளிநாட்டு மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து வெளியேறி இருக்கின்றன. மார்கன் ஸ்டான்லி, ஐஎன்ஜி மற்றும் பைன்பிரிட்ஜ் ஆகிய நிறுவனங்கள் இந்திய பிஸினஸை விற்றிருக்கிறார்கள்.