

வருகிற 28-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அன்றைய தினம் சனிக்கிழமை என்றாலும் பங்குச்சந்தைகள் செயல்பட பங்குச்சந்தை ஒழுங்கு முறை ஆணையமான செபி அனுமதி அளித்திருக்கிறது.
இந்திய பங்குச்சந்தைகள் திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே செயல்படும். ஆனால் இந்த வருடம் பட்ஜெட் சனிக்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது. திங்கள் கிழமை சந்தை வர்த்தகத்தை ஆரம்பிக்கும்போது பட்ஜெட்டின் பலன் இந்திய முதலீட்டாளர்களுக்கு முழுமையாக கிடைக்காது என்று பி.எஸ்.இ மற்றும் என்.எஸ்.இ பரிந்துரை செய்ததின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
தவிர திங்கள் அன்று இந்தியாவில் வர்த்தகம் ஆரம்பிப்பதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு சிங்கப்பூரில் எஸ்ஜிஎக்ஸ் நிப்டி வர்த்தகம் தொடங்கி விடும். இதனால் பட்ஜெட் சாதகம் இந்திய முதலீட்டாளர்களுக்கு கிடைக்காமல் போய்விடும். தவிர அந்நிய முதலீட்டாளர்கள் சிங்கப்பூரில் வர்த்தகத்தை ஆரம்பிப்பார்கள் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது.
தவிர, இதற்கு முன்பு 1992-93 மற்றும் 1999-2000-ம் ஆண்டு பட்ஜெட் சனிக்கிழமை அன்றுதான் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இந்திய பங்குச்சந்தைகள் செயல்பட்டன. மேலும் 2000-ம் ஆண்டுக்கு முன்பு பட்ஜெட் மாலை 5 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. அப்போதும் கூட பங்குச்சந்தையில் சிறப்பு வர்த்தகம் நடைபெற்றது என்ற பரிந்துரை காரணமாக வரும் சனிக்கிழமை பட்ஜெட் அன்று பங்குச்சந்தைகள் செயல்பட செபி அனுமதி வழங்கி இருக்கிறது.