தொழில் புரிவதற்கான சூழ்நிலை மாறவில்லை: ஹெச்டிஎப்சி தீபக் பரேக் பேச்சு

தொழில் புரிவதற்கான சூழ்நிலை மாறவில்லை: ஹெச்டிஎப்சி தீபக் பரேக் பேச்சு
Updated on
2 min read

மோடி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இருந்தாலும், அந்த நம்பிக்கை தொழில் புரிவதற்காக சூழலுக்கு இன்னும் முழுமையாக மாறவில்லை என்று ஹெச்டிஎப்சி-யின் தீபக் பரேக் தெரிவித்தார்.

நிர்வாகக் கட்டுப்பாடுகளை தளர்த்தி தொழில் புரிவதற்கான சூழலை மத்திய அரசு உருவாக்க வேண்டும். மோடி தலைமையிலான அரசின் முதல் 9 மாதங்களில் பெரிதாக எதுவும் நடந்துவிடவில்லை. தொழிலதிபர்கள் தங்களது பொறு மையை இழந்து வருகிறார்கள் என்று தெரிவித்தார்.

``மேக் இன் இந்தியா’’ வெற்றி அடைய வேண்டும் என்றால் தொழில் புரிவதற்கான சூழலை எளிதாக்கி, முடிவுகள் வேகமாக எடுக்கும் போதுதான் இது வெற்றி அடையும் என்றார்.

மோடி அரசு தொழில் முனைவோருக்கும் சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தாலும், நடை முறையில் அந்த எண்ணம் எதிரொலிக்கவில்லை. நம்பிக்கை வருமானமாக மாறவில்லை.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொள்கை முடிவுகளை சரியாக எடுக்கவில்லை என்று முதல் முறையாக விமர்சனம் செய்தவர் இவர்தான்.

பிரதமர் மோடி அதிர்ஷ்டசாலி, இவருடைய முதல் 9 மாத காலத்தில் சர்வதேச அளவில் முக்கியமான கமாடிட்டிகளின் விலை குறைந்தது. குறிப்பாக கச்சா எண்ணெய் விலை குறைந்தது என்றார். அனைவருடைய பார்வையும் இந்தியாவின் மீதி திரும்பி இருக்கும் நிலையில் தொழில் புரிவதற்காக சூழ்நிலை மாறவில்லை.

உதாரணத்துக்கு ஹெச்டிஎப்சி வங்கி நிதி திரட்டுவதற்காக விண்ணப்பித்திருந்தது. ஆனால் அதற்கு அனுமதி கிடைப்பதற்கு காலதாமதம் ஆகிவிட்டது என்றார்.

கச்சா எண்ணெய் விலை குறைந்ததில் பல நாடுகளுக்கு சாதகம் என்றாலும், இந்தியாவுக்கு கிடைக்கும் பலன் அதிகம். ஜப்பான் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது என்றாலும் இதனால் அவர்களுக்கு பெரிய சாதகம் இல்லை. 110 டாலரில் கிடைத்தாலும் அவர்கள் வாங்குவார்கள், ஆனால் நாம் வாங்கினால் நம்முடைய நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும், அந்நிய செலாவணியும் குறை யும் என்றார்.

ஹெச்டிஎப்சி 20 வருடங்களாக செயல்பட்டு வரும் நிறுவனம், நாங்கள் எங்களுக்கு வரையறைக்குள் செயல்படுகிறோம். அதிகாரிகள் உதவி செய்தாலும், அதே விதிமுறைகளும் கட்டுபாடு களும் இருக்கின்றன. இந்த விதிமுறைகளை ஏன் தளர்த்தக் கூடாது என்றார். பாதுகாப்பு துறையில் அந்நிய முதலீடு 49% அனுமதிக்கப்பட்டுள்ளது.

யாராவது 1,300 கோடியை முதலீடு செய்தால், அதற்கு அமைச்சரவை குழு ஒப்புதல் ஏன் தேவை. அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் (எப்.ஐ.பி.பி) வரம்புக்குள்தானே இருக்கிறது. இந்த கட்டுப்பாடுகளை நீக்கி, தொழில் புரிவதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்றார்.

35 வருடங்களாக இந்த வங்கித்துறையில் இருக்கிறேன். அப்போது 200 கோடி ரூபாய்க்கு மேல் அந்நிய முதலீடு இருந்தால் அமைச்சரவை குழு ஒப்புதலுக்கு அனுப்புவார்கள். இப்போது அந்த தொகை 1,200 கோடி ரூபாயாக இருக்கிறது. ஆனால் இந்த விதி மாறவில்லை.

மேலும் எப்.ஐ.பி.பியின் வரம்புக்குள் முதலீடு வரும் போது எதற்காக அமைச்சரவை குழு அனுமதி தேவை. இல்லை எனில் 5,000 கோடி ரூபாய்க்கு மேலான தொகைக்கு அமைச்சரவை குழு அனுமதி தேவை என்று விதியை மாற்றக்கூடாதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இது தவிர மாநில அரசு விதிமுறைகளிலும் பல மாற்றங்கள் தேவை என்று தீபக் பரேக் தெவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in