

புதுடெல்லி: இந்தியாவின் முக்கிய விமானப் போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனம் சமீப காலமாக விமானம் தாமதம், விமான சேவை ரத்து என தீவிர பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில் விமானிகள் உள்ளிட்ட பணியாளர் பற்றாக்குறை மற்றும் மென்பொருள் கோளாறு காரணமாக நேற்று முன்தினம் 200-க்கும் மேற்பட்ட விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்தது. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் இண்டிகோ விமான சேவையில் நேற்று இரண்டாவது நாளாக பிரச்சினைகள் நீடித்தன.
டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பல விமான நிலையங்களில் 300-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை இண்டிகோ நிறுவனம் நேற்று ரத்து செய்தது. மேலும் பல்வேறு விமான நிலையங்களில் இண்டிகோ விமான சேவையில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் தங்களின் பயணத் திட்டம் பாதிக்கப்பட்டு தவிப்புக்கு ஆளாகினர்.
இந்நிலையில் விமானம் ரத்து, தாமதம் போன்ற தற்போதைய சூழ்நிலைக்கான காரணங்கள் மற்றும் இப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான திட்டங்கள் குறித்து அறிக்கை அளிக்குமாறு இன்டிகோ நிறுவனத்திடம் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நேற்று கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் சிறிய தொழில்நுட்பக் கோளாறுகள், பயண அட்டவணை மாற்றங்கள், பாதகமான வானிலை, விமானப் போக்குவரத்தில் அதிகரித்த நெரிசல் மற்றும் புதிதாக வெளியிடப்பட்ட எப்டிடிஎல் விதிமுறைகள் காரணமாக தற்போதைய நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று இண்டிகோ தலைமை செயல் அதிகாரி பீட்டர் எல்பர்ஸ் கூறியுள்ளார்.
விமானிகள் பணிநேர வரம்பு தொடர்பான திருத்தப்பட்ட விதிமுறைகள் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இது விமானிகள் பணி நேரம் மற்றும் ஓய்வு நேரத்தை வரையறுக்கிறது. இதற்கிடையில் சவுதி அரேபியாவின மதீனாவில் இருந்து நேற்று ஹைதராபாத் நோக்கி வந்த இண்டிகோ விமானம் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக அகமதாபாத்துக்கு திருப்பி விடப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற சோதனையில் இது புரளி எனத் தெரியவந்தது.