

திட்டக் கமிஷனுக்கு மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ள நிதி ஆயோக் அமைப்பு அடுத்த வாரம் முதல் செயல்பட தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அமைப்பின் முதல் துணைத் தலைவராக நியமனம் ஆகப்போவது யார் என்கிற ஆர்வம் எழுந்துள்ளது. விரைவில் நியமிக்கப்பட உள்ள நிலையில் யோஜனா பவனில் அவருக்கான அறை ஒதுக்கும் வேலைகள் நடந்து வருகின்றன.
பொருளாதார அறிஞர் அரவிந்த் பானகரியா முதல் துணைத் தலைவராக நியமிக்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் இந்த அமைப்புக்கான ஐந்து முழுநேர உறுப்பினர்களும் அடுத்த வாரம் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திட்டக்கமிஷனுக்கு மாற்றாக இந்த நிதி ஆயோக் அமைப்பை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அறிவித்தார். இந்த அமைப்பின் தலைவராக பிரதமர் செயல்படுவார். துணை தலைவர் மற்றும் ஐந்து நிரந்தர உறுப்பினர்களும் பிரதமரால் நியமிக்கப்படுவார்கள்.
இந்தியாவை மாற்றுவதற்கான தேசிய நிறுவனமாக இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் மேலும் இரண்டு பகுதி நேர சிஇஓ மற்றும் நான்கு அமைச்சர்களும் செயல்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.