

வங்கிப்பங்குகளில் மியூச்சுவல் பண்ட்களின் முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நவம்பர் மாத நிலவரப்படி முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 70,000 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்திருக்கிறது. நவம்பர் 30-ம் தேதி நிலவரப்படி 70,575 கோடி ரூபாய் அளவுக்கு வங்கிப்பங்குகளில் மியூச்சுவல் பண்ட்கள் முதலீடு செய்திருக்கின்றன.
பங்குச்சந்தை சார்ந்த மொத்த முதலீடுகளில் 21.23 சதவீதம் வங்கிப்பங்குகளில் இருக்கின்றது. பங்கு சார்ந்த முதலீடு மொத்தம் ரூ. 3.32 லட்சம் கோடியாகும். கடந்த அக்டோபர் மாதத்தில் வங்கிப்பங்குகளில் 62,718 கோடி ரூபாய் அளவுக்கு மியூச்சுவல் பண்ட்கள் முதலீடு செய்திருந்தன. கடந்த ஜனவரி மாதம் வங்கிப்பங்குகளில் ரூ.30,339 கோடியாக இருந்த முதலீடு இப்போது 70,575 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
வங்கித்துறைக்கு அடுத்து, மென்பொருள் துறையில் 34,674 கோடி ரூபாயை மியூச்சுவல் பண்ட்கள் முதலீடு செய்திருக்கின்றன. பார்மா துறையில் 22,654 கோடி ரூபாயும், ஆட்டோ துறையில் 20,824 கோடி ரூபாயும், நிதித்துறையில் 19,133 கோடி ரூபாயும் மியூச்சுவல் பண்ட்கள் முதலீடு செய்திருக்கின்றன. இந்த வருடம் நவம்பர் மாதம் வங்கித்துறை குறியீடு 8.7 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
சதவீத அடிப்படையில் பார்க்கும் போது 16.6 சதவீதத் திலிருந்து 21.23 சதவீதமாக வங்கிப்பங்குகளில் முதலீடு செய்வது உயர்ந்திருக்கிறது.