Last Updated : 03 Jul, 2019 02:24 PM

 

Published : 03 Jul 2019 02:24 PM
Last Updated : 03 Jul 2019 02:24 PM

விவசாயம் முதல் வருமான வரி வரை: பட்ஜெட் எதிர்பார்ப்புகள் என்ன?

நடப்பு நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. புதிய அரசு பொறுப்பேற்றவுடன் முழுமையான பட்ஜெட் ஜூலை 5-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டு விட்டதால் அதன் தொடர்ச்சியாகவே இந்த பட்ஜெட் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் இது என்பதால் பல்வேறு எதிர்ப்பார்ப்புகளும் ஏற்பட்டுள்ளன.

இதுகுறித்து நிதி ஆலோசகர் சேகர் ‘இந்து தமிழ் திசையிடம்’ கூறியதாவது    

மத்திய பட்ஜெட்டை பொறுத்தவரையில் விவசாயம், நீர்மேலாண்மை, சுற்றுச்சூழல், உள்கட்டமைப்பு, சிறு குறு தொழில், சீர்த்திருத்தம், அரசு நடைமுறைகளை  எளிமைப்படுத்துதல், வாராக்கடன் பிரச்சினைக்கு தீர்வு காணுதல் இவையெல்லாம் முக்கிய இலக்காக இருக்கக் கூடும்.

விவசாயத்தை மேம்படுத்தவும், விவசாயிகளுக்கு உரிய லாபம் கிடைக்கவும், நடவடிக்கைள் எடுக்கப்பட வேண்டும். குறிப்பாக கார்பரேட் பங்களிப்பின் மூலம் விவசாயத்துக்கு தேவையான நிதி ஆதாரங்களை திரட்டவும் நடவடிக்கை எடுக்கலாம்.

விவசாயத்துக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், சந்தைப்படுத்துதல், குளிர்ப்பதன கிடங்கு உள்ளிட்ட விவசாய தொழிலை மேம்படுத்த அறிவிப்புகள் இடம் பெற வாய்ப்புள்ளது.

வேலையிழப்பு, வேலையில்லா திண்ட்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பொருளாதார நடவடிக்கைகள் அமைய வேண்டும். 

வங்கிகளை வாராக்கடன் பிரச்சினை பெரிய அளவில் உலுக்கி வருகிறது.பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் பெரிய அளவில் பிரச்சினையாகி வருகிறது. கடன் தொகை திரும்ப வராததால் ஒருபுறம் பெரும் நஷ்டத்துக்கு வங்கிகள் ஆளாகும் சூழல் உள்ளது.

வங்கிகள் கடனை வசூலிக்க தீவிரம் காட்டுவதால் ஏற்கெனவே நெருக்கடியில் இருக்கும்  தொழில் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் ஏற்படுகிறது. தொழிலாளர்கள் வேலையிழக்கும் சூழல் ஏற்படுகிறது. ஒன்று சார்ந்த ஒன்று என்ற பொருளாதார சூழலில் அரசு எடுக்கும் ஒரு நடவடிக்கை மற்றொன்றுக்கு பாதகமாகி விடுகிறது.

வாராக்கடனை வசூலிக்க கெடுபிடி காட்டப்படும் நிலையில் பணத்தை வசூலிப்பது சிக்கலாவதுடன், குறிப்பிட்ட தொழில் நிறுவனங்கள் மூடப்படும் சூழலும் உள்ளது. எனவே இதனை தீர்க்க நடைமுறைக்கு சாத்தியமான முறையில் தீர்வுகள் எட்டப்பட வேண்டும். வெளிப்படை தன்மையுடன், அதிகாரிகள் இந்த விவகாரத்தில் அணுகும் வகையில் கொள்கைகள் மாற்றப்பட வேண்டும். கண்காணிப்பும், கடன் வழங்குவதில் வெளிப்படை தன்மையும், நிதி நேர்மையும் தேவையான ஒன்றாக உள்ளது.

பயன்பாடு இல்லாமல் காலியாக வைத்திருக்கும் மனைகளுக்கு வரி விதிப்பதற்கான அறிவிப்பு மத்திய பட்ஜெட்டில் வெளியாகலாம் எனத் தெரிகிறது. இதன்மூலம் மனைகளின் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது. ரியல் எஸ்டேட் தொழிலும் சீரமைக்க பட வாய்ப்பாக அமையும்.

தனிநபர் வருமான வரியை பொறுத்தவரையில் இடைக்கால பட்ஜெட்டில் பல அறிவிப்புகள் வெளியாகின. இந்தியாவில் மக்கள் சேமிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. சேமிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் வகையில் வருமான வரியில் முதலீடுகளுக்கு வழங்கப்படும் வரிச்சலுகை உச்ச வரம்பு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரையில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x