

பங்குச் சந்தையில் தில்லு முல்லு செய்பவர்கள், மோசடி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை செபி எடுத்து வருகிறது. கிட்டத்தட்ட 200 நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள், சொத்துகளை முடக்கும் பணியில் செபி ஈடுபட்டுள்ளது.
தனக்குள்ள அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்தி சொத்துகளை முடக்குவது, முதலீட்டாளர்களுக்கு பணத்தை அளிக்காத நிறுவனங்கள் மீது அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை செபி எடுத்துள்ளது.
இந்த நடவடிக்கை ஒரு மாதத்துக்கு முன்பே தொடங்கப்பட்டாலும், செபி-க்கு அளிக்கப்பட்ட புதிய அதிகாரம் மூலம் இத்தகைய மோசடி, தில்லு முல்லு நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அதேபோல இவற்றின் சொத்துகளையும் பறிமுதல் செய்யும் பணியில் செபி ஈடுபட்டுள்ளது. இத்தகைய நிறுவனங்களுக்குள்ள சொத்துகளைக் கண்டறிந்து அவற்றைக் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இது தவிர மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ), வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவு உள்ளிட்ட துறை அதிகாரிகளுடன் செபி ஆலோசனை நடத்தி வருகிறது.
தில்லுமுல்லு, மோசடி நிறுவனங்களின் சொத்துகளை மீட்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தனிப் பிரிவு ஒன்றை செபி ஏற்படுத்தியுள்ளது. சொத்து மீட்பு நடவடிக்கைகளுக்கென 75 அதிகாரிகளை செபி சமீபத்தில் பணியமர்த்தியுள்ளது.
கடந்த செப்டம்பரிலிருந்து 200 நிறுவனங்களின் சொத்துகளை மீட்டு முதலீட்டாளர்களுக்கு பணத்தை அளிப்பது உள்ளிட்ட பணிகளை இக்குழு மேற்கொண்டுள்ளது.
அரசு அளித்த அதிகாரத்தின் படி வங்கிக் கணக்குகள் முடக்கப் பட்டுள்ளன. இந்நிறுவனங்களின் சொத்துகளை மீட்கும் நடவடிக்கை யும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
ஏற்கெனவே அமலில் உள்ள பங்கு பரிவர்த்தனை சட்டம் (அமலாக்கம்), 2013- வரும் கூட்டத் தொடரில் கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது.
இந்த அவசர சட்டம் ஏற்கெனவே இருமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது சட்டப்படி அமலாக வேண்டுமெனில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.
தில்லுமுல்லு, மோசடி நிறுவனங்களின் கணக்குகளை முடக்குமாறு குறிப்பிட்ட வங்கிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது போன்ற நடவடிக்கை யால் இதுவரை ரூ. 1,550 கோடி முடக்கப்பட்டது. இத்தொகை யானது மேற்கு வங்கத்தில் வாடிக்கை யாளரிடமிருந்து முறைகேடாக நிதி திரட்டிய ஒரு நிறுவனத்தின் சேமிப்புக் கணக்குத் தொகையாகும். சம்பந்தப்பட்ட வழக்கில் மோசடி நிறுவனமான எம்பிஎஸ் கிரீனரி டெவலப்பர்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ. 1,520 கோடியை மீட்க வேண்டும் 50 வங்கிகளுக்கு செபி நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
2003 முதல் 2005 வரையான காலத்தில் ஐபிஓ மூலம் மோசடி செய்த பிரமிட் சாய்மீரா நிறுவன வழக்கிலும் வங்கிக் கணக்கு மற்றும் சொத்துகளை முடக்குமாறு செபி உத்தரவிட்டது.
சொத்துகளை மீட்கும் நடவடிக்கை ஒருபுறமும் அபராதத்தை செலுத்தத் தவறிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியிலும் செபி தீவிரம் காட்டி வருகிறது.
2013 ஜூன் நிலவரப்படி மொத்தம் 1,300 தனிநபர் மற்றும் நிறுவனங்கள் மீதான அபராதத் தொகை மட்டும் ரூ. 121 கோடியாகும். இதில் சில 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளது.
செபி தனக்குள்ள அதிகார வரம்பு குறித்து நாடாளுமன்ற குழுவினரிடம் அதிருப்தி தெரிவித்திருந்தது. கடந்த காலங்களில் தில்லுமுல்லு பேர்வழிகளை குற்றவாளிகள் என நிரூபிக்க முடியவில்லை. இதற்கு செபியிடம் வலுவான அதிகாரம் இல்லை தெரிவிக்கப்பட்டது.
சொத்துகளை முடக்குவதற்கான அதிகாரம், அபராதம் விதிப்பதற்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று நிதிக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் செபி தெரிவித்தது. அபராதம் செலுத்தத் தவறுவோர் மீது சட்ட ரீதியாக வழக்கு பதிவு செய்ய மட்டும் அதிகாரம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் நீதித்துறையில் ஏற்படும் கால தாமதம் காரணமாக இதை வலுவாக செயல்படுத்த முடியாத நிலை உள்ளதாக செபி தெரிவித்தது.
இதையடுத்தே செபி சார்பாக நிதியமைச்சக அதிகாரிகள் நாடாளுமன்ற குழுவின் ஆஜராகி புதிய பாதுகாப்பு சட்டம் 2013 உருவாக்கத்துக்கான கருத்துகளை அளித்தது.
1956ம் ஆண்டு பங்கு பரிவர்த்தனை ஒப்பந்த வரைமுறை சட்டம் மற்றும் செபி சட்டம் 1992 ஆகியவற்றில் சில மாற்றங்களோடு புதிய சட்டம் அமல்படுத்தப்படும்.