

பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்களில் சி.இ.ஒ.கள் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகளின் சம்பளம் மிக அதிக அளவில் இருக்கிறது. இத்தனைக்கும் பல நிறுவனங்களின் வியாபாரம் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. இந்த நிலையில் சி.இ.ஓ.க்கள் சம்பளத்துக்கு புதிய விதிமுறையை கொண்டு வர போவதாக செபி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களிடமிருந்து இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே கருத்துகளைக் கேட்டிருக்கிறது செபி. மேலும் புதிதாக வந்துள்ள கம்பெனி சட்டத்திலும் இது தொடர்பாக விதிமுறைகள் இருக்கின்றன.
சம்பள விஷயத்தில் நிறுவனத்தின் மேல்நிலை அதிகாரிகளுக்கும், நடுநிலை அதிகாரிகளுக்கும் ஒரு விகிதத்தை உருவாக்க வேண்டும். மேலும் மேல் நிலை அதிகாரிகளின் சம்பளத்தையும், நிறுவனத்தின் செயல்பாட்டையும் சிறுமுதலீட்டாளர்களுக்கு நிறுவனம் தெரிவிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது.
நிறுவனத்தின் நிறுவனர்களே உயர் அதிகாரிகளாக இருந்துகொண்டு, கம்பெனி சிறப்பாக செயல்படாத போது சம்பளமாக ஒரு பெரிய தொகையை எடுத்துக்கொண்டதாக பல சம்பவங்கள் வெளிவந்ததை அடுத்து இந்த விதிமுறையை கொண்டுவரப்போகிறது.
சம்பள விஷயத்தில் தகவல்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும். இதன் அடைப்படையில்தான் சிறுமுதலீட்டாளார்கள் தங்களது முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு வசதியாகதான் இந்த விதிமுறையே தவிர, சம்பளத்தில் எந்தவிதமான உச்சவரம்பையும் செபி நிர்ணயம் செய்யவில்லை.
சிறுமுதலீட்டாளர்களுக்கு அதிக அதிகாரத்தையும், நிறுவன நிர்வாக விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு அதிக அபராதத்தையும் செபி விதிக்கப்போவதாகத் தெரிகிறது. மேலும், ’கார்ப்பரேட் கவர்னன்ஸ் ரேட்டிங்’ என்ற புதிய திட்டத்தை செபி கொண்டுவர போகிறது.
ஐ.பி.ஓ. கட்டுப்பாடு
தவிர, பொதுப் பங்கு வெளியிடும் நிறுவனங்கள், அவ்விதம் திரட்டப்பட்ட நிதியை வேறு உபயோகத்துக்குப் பயன்படுத்த நினைத்தால் அது குறித்து முதலீட்டாளர்களுக்கு கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என செபி அறிவுறுத்தியுள்ளது. இந்த விதியை விரைவில் கட்டாயமாக்க செபி முடிவு செய்துள்ளது. நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும் சிறு முதலீட்டாளர்களைக் காக்க செபி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. பொதுப் பங்கு வெளியீடு செய்யும்போது அதில் திரட்டப்படும் தொகை வேறு பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என்ற விவரம் அதில் இடம்பெறுவதில்லை. அவ்விதம் வேறு பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் பட்சத்தில் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் செபி குறிப்பிட்டுள்ளது.