

மியூச்சுவல் ஃபண்ட் துறைக்கு நீண்ட கால கொள்கைகளை பங்குச்சந்தை ஒழுங்கு முறை ஆணையமான செபி கடந்த வாரம் கொண்டுவந்தது. இதன் மூலம் இந்தத் துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு அடுத்த ஐந்தாண்டுகளில் ரூ.20 லட்சம் கோடியாக உயரும் என்று செபி எதிர்பார்ப்பதாக தெரிவித்திருக்கிறது.
தற்போதைக்கு மியூச்சுவல் ஃபண்ட் துறை ரூ.9 லட்சம் கோடியை கையாள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வரிச்சலுகைகள் மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகள் இந்த பிஸினஸின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்று தெரிவித்திருக்கிறது. மேலும், நீண்ட காலக் கொள்கைகள் மூலம் மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கும் என்றும், இதன் மூலம் சிறுமுதலீட்டாளர்கள் அதிக அளவில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வார்கள் என்றும் செபி எதிர்பார்க்கிறது.
மேலும் இது பரந்துபட்ட வளர்ச்சியாக இருக்கும் என்று செபி கூறி இருக்கிறது. அதாவது மியூச்சுவல் ஃபண்ட் போலியோக்களின் எண்ணிக்கை, சிறு நகரங்களில் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய் பவர்களின் எண்ணிக்கை, மியூச்சுவல் ஃபண்ட் விநியோகம் செய்பவர்கள் என பரவலான வளர்ச்சியாக இருக்கும் என்றும் செபி தெரிவித்திருக்கிறது.
மேலும், சிறுமுதலீட் டாளர்களின் பாதுகாப்புக்காக, தேவையில்லாத சிறிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இந்த பிஸினஸில் இருக்க வேண்டாம் என்றும், மியூச்சுவல் ஃபண்ட் என்பது நீண்ட கால முதலீட்டு திட்டம் என்றும் செபி அறிவுறுத்தியிருக்கிறது.
கடந்த சில வருடங்களாக மியூச்சுவல் ஃபண்ட் துறையில் ஒரு தேக்க நிலை நிலவுகிறது. இதை ஊக்கப்படுத்த பல நடவடிக்கைகளை செபி எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கர்களின் சேமிப்பில் 44 சதவீத அளவுக்கு மியூச்சுவல் ஃபண்ட்களில் இருக்கிறது. ஆனால் இந்தியர்களின் மியூச் சுவல் ஃபண்ட் சேமிப்பு சுமார் 2.5 சதவீதம் மட்டுமே.