முன் தேதியிட்டு வரி வசூல் கூடாது: பார்த்தசாரதி ஷோம்

முன் தேதியிட்டு வரி வசூல் கூடாது: பார்த்தசாரதி ஷோம்
Updated on
2 min read

அரசு தனது வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக முன் தேதியிட்டு வரி வசூல் செய்யும் போக்கை அரசு கைவிட வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சரின் ஆலோசகர் பார்த்தசாரதி ஷோம் கூறினார்.

வோடபோன் நிறுவனத்துக்கும் அரசுக்கும் இடையே வரி தொடர்பான பிரச்னை நீடித்து வரும் நிலையில் நிதியமைச்சரின் ஆலோசகர் இத்தகைய கருத்தைத் தெரிவித்திருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

டெல்லியில் திங்கள்கிழமை அசோசேம் ஏற்பாடு செய்திருந்த சர்வதேச வரி தொடர்பான மாநாட்டில் பேசிய அவர் மேலும் கூறியதாவது: மூன்று முக்கியமான தருணங்களில்தான் முன்கூட்டி வரி வசூல் செய்வதை அமல்படுத்த முடியும். முதலில் எதற்காக வரி வசூல் செய்யப்படுகிறது என்பது தெளிவான காரணம் இருக்கும் பட்சத்திலும், தவறு செய்தவர்கள் தங்களது தவறைத் திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பாக இருக்கும் போதும், மூன்றாவது சிறப்பான, அபூர்வமான வரி விதிப்பு முறை இருந்தால் மட்டுமே முன் தேதியிட்டு வரி வசூல் செய்ய வேண்டும்.

ஆனால் வருமானத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக முன் தேதியிட்டு வரி வசூல் செய்வதை ஏற்க முடியாது என்று அவர் கூறினார்.

முன்தேதியிட்டு வரி வசூல் செய்வதற்கான சட்டத்தை அமல்படுத்துவதால் இந்தியாவில் தொழில் தொடங்கும் சூழல் பாதிக்கப்படாதா? அதிலும் குறிப்பாக லண்டனைச் சேர்ந்த வோடபோன் நிறுவன விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, இந்த விஷயத்தில் சமரச தீர்வு காண விரும்புவதாக முன்னர் வோடபோன் நிறுவனம் தெரிவித்தது. அந்நிறுவனத் தலைவர் அனல்ஜீத் சிங் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தைச் சந்தித்துப் பேசி இப்பிரச்னையை பரஸ்பர ஒப்புதலோடு தீர்வு காண சம்மதித்தார் என ஷோம் கூறினார். இந்த விவகாரத்தில் அரசை மட்டும் குறை கூறுவதில் பயனில்லை. எந்த ஒரு பிரச்னையிலும் சமநிலையிலான அணுகுமுறை மிகவும் அவசியமானது என்று ஷோம் குறிப்பிட்டார்.

2007-ம்ஆண்டு வோடபோன் நிறுவனம் ஹச்சிசன் நிறுவனத்தைக் கையகப்படுத்தியது. இதில் வரி ஏய்ப்பு செய்ததாகவும் ரூ. 11,200 கோடி வரி செலுத்த வேண்டும் என்றும் அரசு கூறியது.

வரி செலுத்துவோர் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். வரி விதிப்பு முறையில் உள்ள அனைத்து அம்சங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்று ஷோம் கூறினார்.

முன் தேதியிட்டு வரி வசூல் செய்வதாக அரசை மட்டுமே குறை கூறுவதில் பயனில்லை. இதன் பின்னணியில் உள்ள யதார்த்த நிலையை ஆராய்ந்து நடுநிலையான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

முன் தேதியிட்டு வரி வசூல் செய்யும் சட்ட அமலாக்கம் தொடர்பாக அரசுக்கு பரிந்துரைகள் அளிக்கும் குழு ஷோம் தலைமையில் நியமிக்கப்பட்டது. குறிப்பாக இந்தியாவில் சொத்து பரிமாற்றம் அதாவது வோடபோன் நிறுவனம் ஹச்சிசன் நிறுவனத்தைக் கையகப்படுத்தியது உள்ளிட்ட விஷயங்களில் உள்ள வரி சார்ந்த விஷயங்களை இக்குழு ஆராயும்.

முன் தேதியிட்டு வரி வசூல் செய்யும் நடைமுறையைக் கைவிட வேண்டும் என்று அரசுக்கு கடந்த ஆண்டு இக்குழு பரிந்துரை செய்தது.

பங்குதாரர்களிடம் விரிவாக ஆலோசனை செய்து அதன்பிறகு, வெளிப்படைதன்மையோடு முன்தேதியிட்டு வரி விதிக்கலாம் என்று ஷோம் கூறினார்.

பொதுவாக அரசு தனது அடிப்படை வரிவிதிப்புக் கொள்கையில் மாற்றம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. வரி செலுத்துவோரிடம் ஆலோசனை செய்யாமல் அவர்கள் எதிர்பார்க்காத சமயத்தில் மாற்றம் செய்வது நல்லதல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

வரி செலுத்துவோரின் சுமையைக் குறைப்பதற்காகத்தான் பல நடவடிக்கைகளை அரசு அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருவதாக ஷோம் கூறினார். இத்தகைய நடைமுறைகள் கொஞ்சம் கொஞ்சமாக வரி செலுத்துவோர் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தும் என்றும் ஷோம் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in