

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதி ஆண்டில் வளர்ச்சி 7.7 சதவீத அளவுக்கு அதிகரிக்கும் என்று மார்கன் ஸ்டான்லி கணித்துள்ளது. முன்னதாக 7.5 சதவீதமாக கணித் திருந்த இந்திய பொருளாதார வளர்ச்சியை தற்போது மாற்றிக் கொண்டுள்ளது. பொருளா தார புள்ளி விவரங்களில் ‘நேர் மறையான ஆச்சரியங்கள்’ காரணமாக வளர்ச்சி அதிகரிக்கும் என்பதால் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச நிதி ஆலோசனை நிறுவனமான மார்கன் ஸ்டான்லி, உள்நாட்டு நிகர உற்பத்தி மற்றும் நுகர்வு, பொதுமக்களின் வாங்கும் சக்தி காரணமாக இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்த தங்களது மதிப்பீட்டை 2016 ல் 7.5 சதவீதத்திலிருந்து 7.7 சதவீதமாக மாற்றியமைக்கிறோம் என்றும் 2017 க்கான எதிர்பார்ப்பை 7.7 சதவீதத்திலிருந்து 7.8 சதவீதமாக மாற்றியமைக்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
2015-16 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.9 சதவீதமாக இருந்தது இதனால் ஒட்டுமொத்தமாக இந்திய ஜிடிபி வளர்ச்சி கடந்த ஐந்து ஆண்டு களில் இல்லாத அளவாக அதிகபட்சமாக 7.6 சதவீதமாக உயர்ந்தது என்றும் குறிப்பிட்டுள்ளது.
பிரெக்ஸிட்டால் பாதிப்பு?
பிரெக்ஸிட் விவகாரமும் இந்த மதிப்பீட்டை மாற்றியமைக்க முக்கிய காரணமாகும். பிரிட்டன் வெளியேற்றத்தால் இந்தியாவிலும் பாதிப்புகள் எதிரொலிக்கலாம் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்தியாவின் வர்த்தக மற்றும் நிதிச் சேவை வளர்ச்சிகளில் பிரெக்ஸிட் எதிரான பாதிப்புகளை உருவாக்கவில்லை என்று நினைக்கிறோம் என்று ஸ்டான்லி குறிப்பிட்டுள்ளது
எனினும் ஆசிய அளவில் இதர திறந்த பொருளாதார நாடுகளோடு ஒப்பிடும்போது சிறிய அளவிலான பாதிப்பு இந்தியாவுக்கு இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் இங்கிலாந்துக்கான ஏற்றுமதி வர்த்தகக் கொள்கைகளில் இது எதிரொலிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது
வெளி வர்த்தகத் தேவை குறைவு மற்றும் தனியார் முதலீடுகளில் காணப்படும் மந்த நிலை ஆகியன வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகத் திகழும் என அறிக்கை தெரிவித்துள்ளது. தனியார் முதலீடு கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளதையும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. .
தனியார் முதலீடு குறைவு, வெளி வர்த்தகப் பற்றாக்குறை, ரியல் எஸ்டேட் அதிக விலை, நிறுவன செலவு அதிகரிப்பு ஆகிய நான்கு அம்சங்களோடு வங்கிகளின் பலவீனமான நிதி நிலை அறிக்கையும் வளர்ச்சியைப் பாதிக்கும் என மார்கன் ஸ்டான்லி குறிப்பிட்டுள்ளது.