

குவாலியர்: மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 2,000 பிரஹார் இலகு ரக இயந்திரத் துப்பாக்கிகளின் (எல்எம்ஜி) முதல் தொகுதியை இந்திய ராணுவத்திடம் அதானி டிஃபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் ஒப்படைத்து உள்ளது.
இது குறித்து அதானி டிஃபென்ஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி ஆசிஷ் ராஜ்வன்ஷி கூறும்போது, ”இஸ்ரேல் வெப்பன் இண்டஸ்ட் ரீஸின் தொழில்நுட்பக் கூட்டாண்மையுடன் இந்தத் துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 40,000 துப்பாக்கிகளை தயாரிப்பதற்கான இந்த ஒப்பந்தத்தில், முதல் தொகுதியை ஒப்பந்தக் காலத்திற்கு 11 மாதங்களுக்கு முன்னதாகவே அதானி நிறுவனம் விநியோகித்துள்ளது. வெறும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் என்ற நிலையிலிருந்து ஆயுதத் தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ளோம். ஆண்டுக்கு ஒரு லட்சம் துப்பாக்கிகளைத் தயாரிக்கும் திறன் குவாலியர் ஆலைக்கு உள்ளது" என்றார்.
பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஏ.அன்பரசு பேசுகையில், "காலக்கெடுவுக்கு முன்னதாகவே ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது, இந்திய பாதுகாப்புத் துறை சூழலுக்கு மிக முக்கியம். தொழில் கூட்டாளிகளுக்கு அரசு தோளோடு தோள் நின்று உதவும்" என்றார்.
இஸ்ரேல் வெப்பன் இண்டஸ்ட்ரீஸ் தலைமைச் செயல் அதிகாரி ஷுகி ஸ்வார்ட்ஸ் கூறுகையில், "இஸ்ரேலில் ‘நெகேவ்' எல்எம்ஜி என அழைக்கப்படும் இந்தத் துப்பாக்கிகள் இந்திய ராணுவத்தின் வலிமையை மேலும் வலுப்படுத்தும். இந்தியத் தேவைகளுக்கான எங்களது விநியோகத்தில் எந்தப் பாதிப்பும் இருக்காது" என்றார்.