

அமெரிக்கா- ஈரான் போர் நீடித்து வரும் நிலையில் பெட்ரோலிய பொருளான பிளாஸ்டிக் மூலப் பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, சென்னையில் 20 லிட்டர் கேன் குடிநீர் விலை ரூ.5 உயர்ந்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் தொடரும் நிலையில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக டீக் கடைகள், ஓட்டல்கள் மூடப்படும் போதும், வீட்டு சமையல் சிலிண்டர் விநியோகத்திலும் சிக்கல் ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இப்போது, பெட்ரோலிய உப பொருளான பிளாஸ்டிக் தட்டுப்பாடால் காலி குடிநீர் கேன், பாட்டில்கள் தயாரிப்புக்கு தேவையான பிளாஸ்டிக் மூலப் பொருள் கிடைக்காமல் அதன் விலையும் உயர்ந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் வரை சென்னையில் உற்பத்தி செய்யப்படும் 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட தரமான கேன் விலை ரூ.122 ஆக இருந்தது, இப்போது ரூ.155 முதல் ரூ.165 வரை உயர்ந்துள்ளது. இதனால் வீடுகளில் கொண்டு வந்து கொடுக்கும் 20 லிட்டர் கேன் குடிநீரின் விலை ரூ.30-லிருந்து ரூ.35 ஆக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர் சங்கத்தை சேர்ந்த இலங்கேஸ்வரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, ஏற்கெனவே சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வுகள் வரும் போதெல்லாம் குடிநீர் கேன் விலையை உயர்த்தவில்லை.
இப்போது காலி குடிநீர் கேன், பாட்டில் விலை உயர்வால் வேறு வழியில்லாமல் கேன் குடிநீர் விலையை ரூ.5 உயர்த்தி இருக்கிறோம். 300 மி.லி. குடிநீர் ரூ.5-லிருந்து ரூ.6, 1 லிட்டர் குடிநீர் ரூ.20-லிருந்து ரூ.23 ஆக உயர்த்தி இருக்கிறோம் என்றார்.
இது மட்டுமல்லாமல், வணிக சிலிண்டர் தட்டுப்பாடால் சென்னையில் ரூ.12-க்கு விற்கப்பட்ட டீ, ரூ.15, ரூ.15-க்கு விற்கப்பட்ட காபி ரூ.20, ரூ.10-க்கு விற்கப்பட்ட பஜ்ஜி, போண்டா, சமோசா ரூ.15 ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும், இட்லி மாவு கிலோ ரூ.45 ஆகவும், பழச்சாறு வகைகள், லஸ்ஸி, மோர் விலையும் உயர்ந்துள்ளது.