

ஊழியர் வருங்கால வைப்பு நிதியின் (பிஎஃப்) ஒரு பகுதியை பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்று பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) பரிந்துரை செய்துள்ளது. 40 வயது முதல் 45 வயது பிரிவினரது மாத வருமானம் ரூ. 6,500-க்கு மேல் இருந்தால் இவர்களது ஓய்வுக்கால நிதியை பங்குச் சந்தையில் பரஸ்பர நிதித் திட்டத்தில் முதலீடு செய்யலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இவ்விதம் முதலீடு செய்வது, பங்குச்சந்தையில் பரஸ்பர நிதிய வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் உள்ள ரூ. 5.5 லட்சம் கோடி நிதியை முதலீடு செய்யலாம் என்றும் செபி பரிந்துரைத்துள்ளது. அதேசமயம் ஓய்வுக் காலத்தை நெருங்கும் வயதுப் பிரிவினரின் நிதியை இதில் முதலீடு செய்வது தவறாக அமையலாம் என்றும் எச்சரித்துள்ளது.
அதேசமயம் வருமானம் சார்ந்த விஷயங்களில் கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம், குறைவான ஊதியம் பெறுவோர் இத்தகைய ரிஸ்க்கான முதலீட்டுத் திட்டங்களிலிருந்து விலக்கு பெறுவதற்கு வழியேற்படும். இதன் மூலம் ஓய்வூதிய நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்வதில் நிலவும் முட்டுக்கட்டை நீங்கும் என்றும் செபி சுட்டிக் காட்டியுள்ளது.
செபி வகுத்துள்ள புதிய நீண்டகால பரஸ்பர நிதிக் கொள்கையின் அடிப்படையில் பரஸ்பர நிதித் திட்டங்ளில் இபிஎப்ஓ நிறுவனம் முதலீடு செய்வது தொடர்பான வழிகாட்டுதலை வழங்குமாறு அரசை கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விதிமுறைகளுக்கு செபி இயக்குநர் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது. இது விரைவில் அறிவிக்கையாக வெளியாகும்.
2008-ம் ஆண்டு நிதி அமைச்சகம் பிஎப் வசம் உள்ள மொத்த நிதியில் 15 சதவீதம் வரை பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம் என பரிந்துரைத்திருந்தது. பரஸ்பர நிதியம் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கும் என கூறப்பட்டது. இருப்பினும் இபிஎப் நிதியை நிர்வகிக்கும் அறங்காவலர்களால் இதுகுறித்து திட்டவட்டமான முடிவை எடுக்க முடியவில்லை. அதனால் இதுவரை இபிஎப் நிதியானது எந்த ஒரு பங்குச் சந்தை சார்ந்த திட்டத்திலும் முதலீடு செய்யப்படவில்லை.
மேலும் கடந்த ஆண்டு மத்திய தொழிலாளர் அமைச்சகம் பங்குச் சந்தையில் இபிஎப் நிதியை முதலீடு செய்வதற்கு தடை விதித்தது. பங்குச் சந்தை மற்றும் பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்யக்கூடாது என்றும் குறிப்பிட்டது.
இப்போது திருத்தப்பட்ட விதிமுறைகளை தொழிலாளர் அமைச்சகத்துக்கு அனுப்பி யுள்ளது. அதில் இபிஎப் நிதியில் உள்ள மொத்த தொகையில் 15 சதவீதத்தை பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்ய அனுமதிக்குமாறு கோரியுள்ளது. இந்த முயற்சியானது ஓய்வுக்கால நிதி அதிகரிப்பதற்கு வழியேற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாத சம்பளம் ரூ. 6,500 வரை பெறுவோர் அனைவருக்கும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்வது கட்டாயமாகும். ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் அதிகபட்ச சேமிப்பு செய்பவர்களில் பெரும்பாலோர் வருமான வரி விலக்கு பெறுவதற்காக முதலீடு செய்வதாக செபி சுட்டிக் காட்டியுள்ளது. இத்தகையோர் ஒரு உறுதியான வருமானத்தை எதிர்பார்த்து முதலீடு செய்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளது.
இனிமேல் ஊழியர்களிடம் நிதி பிடித்தம் செய்யும்போது அவர்களிடம் பிடித்தம் செய்யும் நிதியில் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாமா? என்ற கருத்தைக் கேட்டு அதற்கு ஒப்புதல் தரும் ஊழியர்களது நிதியை மட்டுமாவது முதலீடு செய்யலாம் என்ற பரிந்துரையையும் செபி அளித்துள்ளது.