2% கட்டணத்தை விலக்கி கொண்டது பேடிஎம்

2% கட்டணத்தை விலக்கி கொண்டது பேடிஎம்
Updated on
1 min read

வாடிக்கையாளர்கள் தொடர்ந்து நெருக்குதல் கொடுத்துவருவதால் 2 சதவீத கட்டணத்தை பேடிஎம் நிறுவனம் விலக்கிகொண்டது. கிரெடிட் கார்டில் இருந்து பேடிஎம் வாலட்டுக்கு பணம் அனுப்பினால் 2 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என இரு தினங்களுக்கு முன்பு பேடிஎம் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் அறிவித்த 24 மணி நேரத்துக்குள் இந்த கட்டணத்தை விலக்கி கொள்வதாக நிறுவனம் அறிவித்திருக்கிறது.

வாடிக்கையாளர்கள் தங்களு டைய கிரெடிட் கார்டில் இருந்து, வாலட்டுக்கு பணத்தை அனுப்பி, அதன் பிறகு வாலட்டில் இருந்து வங்கி சேமிப்பு கணக்குக்கு இலவசமாக பணத்தை மாற்றி வருகின்றனர். எந்த விதமான கட்டணமும் இல்லாமல் இதுபோன்ற நடவடிக்கைகளில் அதிக வாடிக்கையாளர்கள் ஈடுபட்டதால் இந்த கட்டணம் அறிவித்தது. மார்ச் 8-ம் தேதி முதல் 2 சதவீத கட்டணம் வசூலிக்கப்பட்டது.

வாடிக்கையாளர்கள் தவறாக பயன்படுத்தி வந்தாலும், நியாயமாக செயல்படும் எங்களுடைய பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு இந்த நடவடிக்கையால் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதனால் கட்டண அறிவிப்பை திரும்ப பெறுகிறோம் என நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அதே சமயத்தில் முறைகேடுகளைத் தடுக்க பலவகையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அந்த நடவடிக்கை தொடரும் எனவும் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

சமூக வலைதளங்களில் உடனடியாக விமர்சனங்கள் வருவதால் உடனுக்குடன் செயல்பட முடிகிறது என பேடிஎம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விஜய் சேகர் சர்மா தெரிவித்தார்.

ஆனால் பேடிஎம் கட்டண அறிவிப்பு செய்த சமயத்தில் கூட மற்றொரு வாலட் நிறுவனமான மொபிக்விக் கிரெடிட் கார்டு பயன்படுத்த தடை ஏதும் இல்லை. வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டு மூலம் பணத்தை மாற்றிக்கொள்ளலாம் என தெரிவித்திருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in