

பணமதிப்பு நீக்க நடவடிக்கை நீண்ட கால நோக்கில் இந்தியா வின் வருவாய் உயர உதவியாக இருக்கும் என உலக வங்கி தெரி வித்துள்ளது. மேலும் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் மூலம் வரி வரம்புக்குள் வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: 2016-17-ம் ஆண்டில் பணமதிப்பு நீக்கம் மற்றும் தாமாக முன்வந்து கறுப்புப் பணத்தை தெரிவிக்கும் திட்டம் போன்றவற்றால் கூடுதல் வரி வருவாய் மற்றும் கணக்கில் வராத பணம் அரசுக்கு கிடைத்துள்ளது. மேலும் வரி வரம்புக்குள் வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக் கப்படும் நிதி உட்பட மொத்த வரி வருவாய் பட்ஜெட் இலக்கை விட அதிகரித்து 11.3 சதவீதமாக இருக்கிறது. பெட்ரோலிய பொருட்கள் மீதான உற்பத்தி வரி வசூல் அதிகமானது மொத்த வரி வருவாய் உயர்வதற்கு காரணமாக இருக்கலாம். இருந்தபோதிலும் பணமதிப்பு நீக்க நடவடிக்கை நேரடி வரி வருவாயில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பட்ஜெட் இலக்கை விட குறைவான வரி வருவாயை எட்டியிருக்கிறது.
பணமதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் வருவாய் அதிகரித்து வருகிறது என வரித்துறையினர் குறிப்பிடுகின்றனர். இந்த வரி வருவாய் உயர்வது நிலையான தாக இருக்க வாய்ப்புள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் நிறைய துறைகள் முறையான பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்துள்ளன. மேலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகிறது. முறையான பொருளாதாரமாக மாறிவருவது அதிக திறனுள்ள துறையாக மாறுவதற்கு வழிவகுக்கும் என உலக வங்கி தனது அறிக்கையில் கூறியுள்ளது.