

நிறுவனங்களுக்கான முழுமையான வழிகாட்டு நெறிமுறையை பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) திங்கள்கிழமை (நவம்பர் 18) வெளியிட உள்ளது. நிறுவனங்கள் அளிக்கும் தகவல்களின் தரம் மேம்படுவதற்காக இத்தகைய வழிகாட்டு நெறி வெளியிடப்பட உள்ளது.
பங்குதாரர்கள் விதி 35-ஐ 1,100 நிறுவனங்கள் பூர்த்தி செய்யவில்லை. இதனால் பங்குதாரர்கள் குறித்த விவரங்களை இந்நிறுவனங்களால் அளிக்க இயலவில்லை. மேலும் 900 நிறுவனங்கள் நிறுவன நிர்வாக செயல்பாடுகளுக்கான விதி 49-ன் படி செயல்படவில்லை.
இதேபோல நிறுவனங்கள் செயல்படுவதை இனிமேலும் அனுமதிக்க முடியாது என செபி தலைவர் யு.கே. சின்ஹா தெரிவித்தார். ஃபிக்கி ஏற்பாடு செய்திருந்த பங்குச் சந்தை குறித்த மாநாட்டில் அவர் மேலும் பேசியது:
சில வழிகாட்டு நெறிகள் குறித்த அறிவிப்பை திங்கள்கிழமை வெளியிட உள்ளோம். நிறுவனங்கள் தங்களது முழு விவரத்தை தெரிவிப்பதற்கு இந்த வழிகாட்டு நெறி உதவும். நிறுவன முடிப்பு அறிக்கைகள் தயாரிப்பு தொடர்பான அறிக்கை தயாரிக்க இந்த வழிகாட்டு நெறி நிச்சயம் உதவும் என்று சின்ஹா தெரிவித்தார். இது தொடர்பான விரிவான அறிக்கை திங்களன்று வெளியிடப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
பங்குச் சந்தையில் பட்டியலிடுவதிலிருந்து வெளியேறுவது தொடர்பான விவரங்களை உள்ளடக்கியதாக இந்த வழிகாட்டு நெறி இருக்கும்.
தேவைப்பட்டால் நிறுவனங்கள் விருப்ப ஒதுக்கீடு அடிப்படையில் நிறுவனங்களுக்கு பங்குகளை ஒதுக்குவது குறித்தும் ஆராயப்படும் என்று சின்ஹா கூறினார்.
உள்நாட்டு நிறுவனங்கள் சர்வதேச சந்தை நிலவரங்களையும் கவனிக்க வேண்டும். சர்வதேச நிலவரத்துக்கேற்ப தங்களது நடவடிக்கைகள், அணுகுமுறைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். இப்போது முதலீட்டாளர்களை மையமாக வைத்தே பங்குச் சந்தைகள் செயல்படுகின்றன என்பதை நிறுவனங்கள் உணர வேண்டும் என்றார் சின்ஹா.
கடந்த ஐந்தாண்டுகளில் பங்குதாரர்களின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. மேலும் நிறுவன முதலீடுகள் சிறு முதலீட்டாளர்களை பாதிக்காத வகையில் வெளிப்படைத் தன்மையோடு இருக்கின்றன. நிறுவனங்கள் இதை நிச்சயம் மறுக்க முடியாது என்று குறிப்பிட்ட சின்ஹா, பொதுமக்களே நிறுவன செயல்பாடுகளை கண்காணிப்பது சர்வதேச அளவில் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக சின்ஹா குறிப்பிட்டார்.
பார்ச்சூன் 500 நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் சிறப்பாக செயல்படாததால் எவ்விதம் வெளியேற்றப்பட்டனர் என்பதே இதற்கு சிறந்த உதாரணம் என்று குறிப்பிட்ட அவர், நிறுவன செயல்பாடுகள் இன்னும் வெளிப்படைத் தன்மை கொண்டதாகவும், ஒவ்வொருவரின் செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளும் வகையிலும் அமைய வேண்டும் என்றார்.
முன்பு நிறுவனங்களை மட்டுமே செபி தண்டித்தது. இப்போது சிஇஓக்கள் மற்றும் சிஎப்ஓக்கள் பக்கம் திரும்பியுள்ளது என்று சின்ஹா குறிப்பிட்டார்.
சமீப காலமாக ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் பின்பற்றும் விதிமுறைகளை இந்திய நிறுவனங்களும் இப்போது கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார்.
சில நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் விதிமுறைகள் நிறுவனங்களைப் பாதிக்கலாம். இதுகுறித்து நிறுவனங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்தந்த நாடுகளில் உள்ள விதிமுறைகளுக்கேற்ப செயல்பாடுகளை நிறுவனங்கள் மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். ஐரோப்பிய பங்குச் சந்தையில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டங்கள் இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் கூறினார்.
இத்தகைய சூழலில் அந்த நாட்டு பங்குச் சந்தையோடு பேச்சு நடத்தி அதற்குத் தீர்வு காணும் நடவடிக்கையையும் செபி எடுத்து வருவதாக சின்ஹா குறிப்பிட்டார்.
தொழில்நுட்ப அடிப்படையிலான தணிக்கை முறைகளை செபி மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர் இதன் மூலம் சந்தை செயல்பாட்டின் மீதான நம்பகத் தன்மை மேம்படும் என்றார் சின்ஹா.