தாமாக முன்வந்து கருப்பு பண விவரம் அளிக்கும் திட்டம்: குறுஞ்செய்தி அனுப்பி நினைவூட்டுகிறது வருமான வரித்துறை

தாமாக முன்வந்து கருப்பு பண விவரம் அளிக்கும் திட்டம்: குறுஞ்செய்தி அனுப்பி நினைவூட்டுகிறது வருமான வரித்துறை
Updated on
1 min read

தாமாக முன்வந்து கருப்புப் பண விவரத்தைத் தாக்கல் செய்து தண்டனையிலிருந்து தப்பிக்கும் ஐடிஎஸ் திட்டம் இம்மாதம் 30-ம் தேடியுடன் முடிவடைகிறது. இன்னும் 11 நாள்களே உள்ள நிலையில் நினைவூட்டல் குறுஞ்செய்தியை வருமான வரித்துறை அனுப்பி வருகிறது.

இந்தத் திட்டத்தில் வருமான விவரத்தைத் தாக்கல் செய்வோர் விவரம் 100 சதவீதம் பாதுகாப்பாக வைக்கப்படும். இந்த விவரம் எக்காரணத்தை முன்னிட்டும் வேறு எவருக்கும் தெரிவிக்கப்படாது என்று வருமான வரித்துறை உறுதிபட தெரிவித்து வருகிறது.

இந்தத் திட்டம் கடந்த நான்கு மாதங்களாக அமலில் இருந்து வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் சொத்து விவரம் தாக்கல் செய்வோர் சொத்து மதிப்பில் 45 சதவீதம் மற்றும் அபராத தொகை செலுத்த வேண்டும்.

வருமானத்தை தெரிவிக்கும் இந்தத் திட்டம் தொடர்பாக பல்வேறு விதமான கேள்விகளுக்கு மத்திய நேரடி வருமான வரித்துறை (சிபிடிடி) விளக்கங்களை அளித்துள்ளது. மே 31-ல் தொடங்கி செப்டம்பர் 30 வரையான இந்தத் திட்டத்துக்கான அனைத்து நடைமுறைகளையும் அடிக்கடி விளக்கி வந்தது.

இந்த முறையில் வரி செலுத்துவோர் வங்கிக் கணக்கில் வரித் தொகையை செலுத்துவர். ஆனால் இதுபற்றிய விவரத்தை வங்கி அதிகாரிகள் எதுவும் கேட்க மாட்டார்கள் என வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விதிக்கப்படும் வரித் தொகையை மூன்று தவணைகளில் செலுத்தும் வசதியை மத்திய நிதி அமைச்சகம் அளித்துள்ளது. இதன்படி 2017 செப்டம்பர் 30-ம் தேதிக்குள் வரித் தொகை முழுவதையும் செலுத்த வேண்டும்.

வரித்தொகையின் முதல் 25 சதவீதத் தொகை நவம்பர் மாதத்திற்குள்ளும், 2017 மார்ச் மாதத்திற்குள் 25 சதவீத தொகையையும், அடுத்த ஆண்டு செப்டம்பருக்குள் எஞ்சிய 50 சதவீத தொகையையும் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

முன்பு மொத்த வரித் தொகை, சர்சார்ஜ், அபராதம் உள்ளிட்ட அனைத்தையும் இந்த ஆண்டு நவம்பருக்குள் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தது. பின்னர் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in