உற்பத்தி சார்ந்த மானியங்களை நிறுத்த வேண்டும்: நிதி ஆயோக் உறுப்பினர் பிபேக் தேப்ராய் கருத்து

உற்பத்தி சார்ந்த மானியங்களை நிறுத்த வேண்டும்: நிதி ஆயோக் உறுப்பினர் பிபேக் தேப்ராய் கருத்து
Updated on
2 min read

உற்பத்தி சார்ந்து இருக்கும் அனைத்து வகை மானியங்களும் நிறுத்தப்பட வேண்டும் என நிதி ஆயோக் உறுப்பினர் பிபேக் தேப்ராய் தெரிவித்திருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு விவசாயம் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரி விதிக்க வேண்டும் என இவர் கருத்து கூறியிருந்தார். இந்த கருத்துக்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்திருக்கும் நிலையில் உற்பத்தி சார்ந்த மானியங்களை நிறுத்த வேண்டும் என தற்போது கருத்து தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: உற்பத்தி சார்ந்து எந்தவிதமான மானியங் களும் இருக்ககூடாது. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. தொழில் புரிவதற்கான சூழலை மேம்படுத்தவேண்டும், சாலை உள்ளிட்ட பொது கட்டுமான பிரிவு களை மேம்படுத்த வேண்டும். ஆனால் எந்தவிதமான விதிவிலக்கு களும் கூடாது. விதிவிலக்குகள் வழங்குவது தொடரும்பட்சத்தில், தற்போதைய நடைமுறைகளை சீர் செய்ய முடியாது.

மத்திய அரசும் மாநில அரசு களும் ஜிடிபியில் 17% அளவுக்கு வரி வசூல் செய்கின்றன. ஆனால் மானியங்களுக்காக ஜிடிபியில் 14% வரை செலவாகிறது. மானியத் துக்காக இவ்வளவு தொகையை செலவு செய்வதால், மத்திய அரசால் மற்ற திட்டங்களுக்கு செலவு செய்ய முடிவதில்லை.

குறைந்த விலையில் இடங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான மானியங்களும் ரத்து செய்யப்பட வேண்டும். மானியங்கள் தனிப்பட்ட நபர்களுக்கு கொடுக்க வேண்டும். அப்போதுதான் வறுமையை ஒழிக்க முடியும்.

ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவனுக்கு கல்வி மானியம் கொடுப்பதில் பிரச்சினையில்லை. ஆனால் கற்றுக்கொடுக்காத ஆசிரியருக்கு சம்பளம் கொடுப்பதி னால் எந்த பயனும் இல்லை. இந்த வகையான மானியத்தை நான் முற்றிலும் எதிர்க்கிறேன்.

பணமதிப்பு நீக்கத்தை பொறுத்த வரை பெரும்பாலான இந்தியர்கள் வரி வரம்புக்குள் வருவார்கள். சிலர் ஜிஎஸ்டி மூல மாகவும் சிலர் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் மூலமாகவும் இந்த வரம்புக்குள் வருவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

பணமதிப்பு நீக்கத்தில் நிதி ஆயோக் பங்கு குறித்து கேட்டதற்கு “சில குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே இந்த விவகாரத்தில் பங்கெடுத்தனர். எந்தவிதமான அரசு நிறுவனமும் பங்கேற்கவில்லை’’ என்றார்.

2016 ம் ஆண்டுக்கு முன்பாக 1978-ம் ஆண்டு பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டது. அப்போது வங்கி அமைப்புக்குள் திரும்பி வந்த தொகையை அடிப்படையாக வைத்து, இப்போது 6-15 சதவீத தொகை வங்கி அமைப்புகள் வராது எனும் கணிப்புகள் இருந்தன. ஆனால் அரசாங்கம் எந்தவிதமான கணிப்புகளையும் வெளியிடவில்லை.

வங்கி அமைப்புக்குள் ரூ.15.5 லட்சம் கோடி வந்திருக்கிறது. இவை அனைத்தும் தூய்மையான பணம் கிடையாது. ஆனால் இவை அனைத்தும் உண்மையான பணம். போலி நோட்டுகளை நீக்குவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று. இது ஒரு தொடர் நடவடிக்கை. குறைந்தபட்சம் முன்பு புழக்கத்தில் இருந்த போலி நோட்டுகள் அழிக்கப்பட்டுள்ளன.

போலி நோட்டுகளை பொறுத்த வரை, தொகையை வைத்து மதிப்பிட முடியாது. 50 கோடி என்பது குறைந்த தொகையாக இருக்கலாம். ஆனால் 2008-ம் ஆண்டில் மும்பையில் நடந்த குண்டு வெடிப்புக்கு அது போதுமானது. ரூ.450 கோடி முதல் ரூ.2,000 கோடி போலி நோட்டுகள் நீக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இந்த தொகையை வைத்து அதிக சேதத்தை உருவாக்க முடியும் என தேப்ராய் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in