ஐ.எம்.எப்., உலக வங்கிக்கு போட்டியாக ‘பிரிக்ஸ்’ வங்கி உருவாக்கப்படவில்லை

ஐ.எம்.எப்., உலக வங்கிக்கு போட்டியாக ‘பிரிக்ஸ்’ வங்கி உருவாக்கப்படவில்லை
Updated on
1 min read

பிரிக்ஸ் நாடுகள் ஒன்று சேர்ந்து உருவாக்க உள்ள பிரிக்ஸ் வங்கியானது ஏற்கெனவே செயல்பட்டுவரும் சர்வதேச செலாவணி நிதியம் (ஐ.எம்.எப்), உலக வங்கி ஆகியவற்றுக்கு போட்டியாக உருவாக்கப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் திட்டவட்டமாகக் கூறினார்.

சிகாகோ கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த சர்வதேச விவகாரம் தொடர்பான கருத்தரங்கில் பேசிய ரகுராம் ராஜன், சர்வதேச செலாவணி நிதியம், உலக வங்கி ஆகியன பன்முக தேவைகளுக்காக செயல்பட்டு வருகின்றன.

பிரிக்ஸ் வங்கி உருவாக்கம் இவற்றுக்குப் போட்டியாக இருக்கும் என்று தோன்றவில்லை. மேலும் நம்மிடையே உள்ள அதிகபட்ச நிதியைக் கொண்டு இந்த வங்கி உருவாக்கப்படுகிறது. இவ்விதம் உருவாக்கப்படுவதால் உறுப்பு நாடுகள் பலனடையும். மேலும் தேவைகளுக்கு ஐஎம்எப், உலக வங்கியை நம்பியிருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும் ராஜன் கூறினார்.

பிரிக்ஸ் வங்கி உருவாக்கத்துக்கு போடப்படும் நிதியில் உடனடியாக பலன் கிடைக்காது. இதற்கு பொறுமை அவசியம். இந்த வங்கி உருவாக்கத்தில் உறுப்பு நாடுகள் பங்குதாரர்களாக இருக்க முடியும். இது மிகவும் ஆரோக்கியமான விஷயம் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. கடந்த ஜூலை 15-ம் தேதி பிரேசிலில் நடைபெற்ற கூட்டத்தில் பிரிக்ஸ் நாடுகளுக்கென தனி வங்கி உருவாக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் யோசனையை அனைத்து நாடு களின் தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். 10 ஆயிரம் கோடி டாலர் முதலீட்டில் இந்த வங்கியைத் தொடங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த வங்கி அடுத்த 2 ஆண்டுகளில் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் 6 ஆண்டுகளுக்கு இந்தியா தலைமை வகிக்கும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிரேசிலும், அதைத் தொடர்ந்து ரஷியாவும் 5 ஆண்டுகளுக்கு இந்த வங்கியின் தலைமைப் பொறுப்பை ஏற்கும்.

இந்த உடன்பாட்டுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங், தென்னாப்பிரிக்க அதிபர் ஜேகப் ஜூமா, பிரேசில் அதிபர் தில்மா ரூஸெப் ஆகியோர் ஒப்புக் கொண்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in