

குஜராத் விவசாயிகள் லேஸ் சிப்ஸ் உருளைக்கிழங்குகளை பயிர் செய்வது நிறுவனத்தின் அறிவுசார் சொத்துரிமையை மீறுவதாகும் என்று பெப்ஸி நிறுவனம் வழக்குத் தொடர பெப்ஸி நிறுவனம் விவசாயிகள் உரிமையைப் பறிக்கிறது என்று பாரதிய விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அகமதாபாத் சிவில் கோர்ட்டில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சில விவசாயிகள் சங்கமும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் பெப்ஸி நிறுவனத்துக்கு எதிராக தங்கள் நிலைப்பாடுகளை நீதிமன்றத்தில் முறையிட முடிவெடுத்துள்ளனர்.
பயிர் வேறுபாடு சான்றிதழின் படி எஃப்.எல்2027 அல்லது எப்.சி.5 ரக உருளைக்கிழங்குகளுக்கான அறிவுசார் சொத்துரிமை நிறுவனத்தைச் சார்ந்தது என்கிறது பெப்ஸி நிறுவனம். இதனையடுத்து குஜராத்தைச் சேர்ந்த 4 விவசாயிகள் மீது ரூ.1.5 கோடி கேட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது, இந்த வழக்கு ஏப்ரல் 26ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இதனையடுத்து ஆர்.எஸ்.எஸ். தொடர்புடைய பாரதிய கிசான் சங்கம், குஜராத் கேதூத் சமாஜ், ஜதன் ட்ரஸ்ட் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோர் ஒன்றிணைந்து பன்னாட்டு நிறுவனம்தான் விவசாயிகள் உரிமைகளைப் பறிக்கிறது என்ற குற்றச்சாட்டை முன்னெடுத்துள்ளனர். சட்டப்படி விவசாயிகள் உரிமைகளை நிறுவனம் பறிக்க முடியாது எனவே குஜராத் மாநில அரசும் மத்திய அரசும் தலையிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
பாரதிய கிசான் சங்கம் கூறும்போது, “பெப்ஸி நிறுவனம் கோரும் உரிமைகள் ஏற்கத்தக்கதல்ல. இது விவசாயிகளை அச்சுறுத்தும் நோக்கமாகும் மேலும் சந்தையில் அவர்கள் பொருளுக்கு போட்டி ஏற்பட்டு விடக்கூடாது என்று போட்டியாளர்களை அழிக்கும் நோக்கமும் ஆகும். எனவே நிறுவனம் எந்த வித நிபந்தனையுமின்றி உடனடியாக அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும்” என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இது தொடர்பாக தி இந்து பிசினஸ் லைன் இதழ் பெப்ஸி நிறுவன வழக்கறிஞர்களான ஜே.சாகர் அசோசியேட்ஸைத் தொடர்பு கொண்ட போது நிறுவனத்தைப் பிரதிநிதித்துவம் செய்வதால் கருத்து கூற மறுத்து விட்டனர்.
பெப்ஸி நிறுவனம், விவசாயிகள் சட்ட விரோதமாக லேஸ் சிப்ஸ் உருளைக்கிழங்குகளைப் பயிர்செய்கின்றனர் என்றும் சட்டப்ப்பிரிவு 64 மற்றும் 65க்கு எதிராக இந்தப் பயிரை வளர்ப்பதும், விற்பதும் தவறு என்று கூறியுள்ளது.
இது தொடர்பாக முதற்கட்ட வழக்கு விசாரணையில் கோர்ட் உருளை விவசாயிகளுக்கு ஏப்ரல் 26 வரை இந்த வகை உருளைகளை பயிரிட, விற்க, வளர்க்க தடை விதித்துள்ளது. நிறுவனத்தின் கோரிக்கைக்கு இணங்க இது தொடர்பாக விசாரிக்க கோர்ட் கமிஷனர் ஒருவரை நியமித்தது நீதிமன்றம்.
ஆனால் பெப்ஸி நிறுவனம் உரிமை கோரும் அதேசட்டத்தின் 39வது பிரிவு விவசாயிகள் உரிமைகளையும் பாதுகாக்கிறது என்று விவசாயிகள் தரப்பு கூறுகிறது.