வட்டி விகிதத்தை 0.25% குறைத்தது ரிசர்வ் வங்கி: வீடு, வாகனக் கடன் குறைய வாய்ப்பு?

வட்டி விகிதத்தை 0.25% குறைத்தது ரிசர்வ் வங்கி: வீடு, வாகனக் கடன் குறைய வாய்ப்பு?
Updated on
1 min read

வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்து மத்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் வீடு மற்றும் வாகனக் கடன் வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கைக் கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் ரெப்போ 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. 6.5 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை கூட்டத்தின் போதும் வட்டி விகிதத்தைக் குறைக்குமா என்பதுதான் கேள்வியாக இருக்கும். அதுவும், தற்போது தொழில்துறை சற்று சுணக்கமாக இருக்கும் சூழலில் அதிக அளவிலான முதலீடுகளை சந்தையில் வரச்செய்து அதன் மூலம் பொருளாதாரத்தை ஊக்குவிக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

முதலீடுகள் அதிகரிக்க வேண்டுமெனில் மத்திய வங்கியின் கடன் வட்டி விகிதம் குறைவாக இருக்க வேண்டும். சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் நுகர்வை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.

எனவே, தற்போது முதலீடுகள் அவசியமாக உள்ளன. இதனடிப்படையில் பார்க்கும்போது, இது ரிசர்வ் வங்கி வட்டிவிகிதத்தைக் குறைக்கவேண்டிய நேரம் என நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் உள்ளிட்டோர் வலியுறுத்தி இருந்தனர். அதற்கு ஏற்ப வங்கி வட்டி விகிதம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

பின்னர் இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘2019-2020 மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.4 சதவீதமாகும். பணவீக்க விகிதம் 2019-2020 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 3.2-3.4% ஆக மதிப்பிடப்படுகிறது. 2019-2020 மூன்றாவது காலாண்டில் 3.9 சதவீதம் என மதிப்பிடப்பட்டு உள்ளது’’ எனக் கூறினார்.

ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்துள்ளதால் வர்த்தக வங்கிகளும் வீடு, வாகனம் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்புள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in