

ஒவ்வொரு வாகனத்துக்கும் பெயர் வந்த விதம் மிகவும் சுவாரஸ்யமானது. ஆட்டோ மொபைல் துறையில் வாகனங்கள் மிகவும் பிரபலமடைந்ததற்கு அவற்றின் செயல்பாடு மட்டுமின்றி அவற்றின் பெயர்கள் கவர்ச்சியாக, எளிமையாக இருந்ததும் காரணமாகும். அந்த வரிசையில் சில நிறுவனங்களின் பெயர் வந்த விதத்தைப் பார்க்கும்போது வியப்பு மேலிடும்.
நிசான்
1914-ம் ஆண்டு டிஏடி மோடோகார் என்ற பெயரில் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தை உருவாக்கிய மூன்று பேரின் குடும்ப பெயரின் முதல் எழுத்து டிஏடி என்பதாகும். 1931-ம் ஆண்டு இந்நிறுவனம் டட்சன் என்ற பெயரில் சிறிய ரகக் காரை அறிமுகப்படுத்தியது.
1928-ம் ஆண்டு தொழிலதிபர் யோஷிசுகே ஐகாவா புதிய நிறுவனத்தை நிப்பான் சாங்யோ என்ற பெயரில் தொடங்கினார். இதற்கு ஜப்பான் தொழிலகம் என்று பொருளாகும். டிஏடி நிறுவனத்தை 1931-ம் ஆண்டில் ஐகாவா வாங்கினார். பின்னாளில் நிப்பான் சாங்யோ நிறுவனம் சுருக்கமாக நிசான் என அழைக்கப்பட்டது.
இருப்பினும் 1980-ம் ஆண்டு வரை ஜப்பானிலிருந்து ஏற்றுமதியாகும் கார்கள் டட்சன் லோகோவிலேயே தயாரிக்கப் பட்டன. 1981-ம் ஆண்டு டட்சன் லோகோவை பயன்படுத்தப் போவதில்லை என்று நிசான் இயக்குநர்கள் அறிவித்ததோடு நிசான் பிராண்டை பிரபலப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். இதையடுத்தே டட்சனுக்குப் பதிலாக நிசான் கார்கள் சந்தையில் வலம் வந்தன.
டொயோடா
இந்நிறுவனம் முதலில் கார் தயாரிப்பு நிறுவனமாகத் தொடங்கப்படவில்லை.
முதலில் டொயோடா என்ற பெயரும் வைக்கப்படவில்லை. 1926-ம் ஆண்டு சகிசி டொ யோட்டா இந்நிறுவனத்தை விசைத்தறிக்காகத் தொடங் கினார். இந்நிறுவனம் ஆரம் பத்தில் விசைத்தறிகளைத் தயாரித்தது.1933-ம் ஆண்டு டொயோட்டாவின் மகன் கிச்சிரோ தனியாக ஒரு மோட்டார் பிரிவைத் தொடங்கினார். இந்நிறுவனம் மிகக் குறுகிய காலத்தில் மிகப் பெரும் வளர்ச்சியை எட்டியது.
டொயோட்டா என்றிருந்த நிறுவனம் டொயோடா என்றானது. பிறகுதான் 1936-ம் ஆண்டு இந்நிறுவனத்துக்கான லோகோவை வடிவமைக்க ஒரு போட்டியை நடத்தியது. இதில் வெற்றி பெற்றவர் புதிய லோகோவை வடிவ மைத்தார். டொயோட்டா என்று எழுதுவதற்கு 9 பிரஷ் ஸ்ட்ரோக் தேவைப்பட்டது. அதேசமயம் டொயோடா என்று எழுத 8 ஸ்ட்ரோக் தேவைப்பட்டது. ஜப்பானில் 8-ம் எண் மிகவும் ராசியானது. இதனால் டொயோடா என்ற பெயர் இறுதி செய்யப்பட்டது.