நாளை முதல் ஒரே நாளில் கிளியர் ஆக உள்ள காசோலைகள் - ரிசர்வ் வங்கி நடவடிக்கை

நாளை முதல் ஒரே நாளில் கிளியர் ஆக உள்ள காசோலைகள் - ரிசர்வ் வங்கி நடவடிக்கை
Updated on
1 min read

மும்பை: காசோலைகளை ஒரே நாளில் கிளியர் செய்வதற்கான நடைமுறை அக்.4 முதல் வங்கிகள் அமல்படுத்தப்பட உள்ளன. இதற்கான வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி வழங்கி உள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்களின்படி, அக்.4 முதல் அனைத்து வங்கிகளும் காசோலைகளை ஒரே நாளில் கிளியர் செய்ய வேண்டும். இது, காசோலைகள் மூலம் பணம் செலுத்துவதை விரைவானதாகவும், எளிதானதாகவும் மாற்றும். தற்போது காசோலைகள் கிளியர் ஆக இரண்டு நாட்கள் வரை ஆகிறது.

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலை அடுத்து, நாளை முதல் காசோலைகள் ஒரே நாளில் கிளியர் ஆகும் என தங்கள் வாடிக்கையாளர்களுக்கு HDFC, ICICI உள்ளிட்ட வங்கிகள் தெரிவித்துள்ளன. காசோலைகள் டெபாசிட் செய்யப்பட்ட ஒரு சில மணி நேரங்களில் அவை கிளியர் ஆகும்.

இந்த புதிய நடைமுறை இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, அக்டோபர் 4 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 3 வரை முதல் கட்டமும், ஜனவரி 3-க்குப் பிறகு இரண்டாம் கட்டமும் செயல்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை காசோலைகளுக்கு பணம் வழங்குவதற்கான உறுதிப்படுத்துதல் பணிகள் நடைபெறும். காசோலையைப் பெற்ற வங்கி, அதனை ஸ்கேன் செய்து கிளியரிங் மையத்துக்கு அனுப்ப வேண்டும். பின்னர், கிளியரிங் மையம் காசோலையின் படத்தை பணம் செலுத்தும் வங்கிக்கு அனுப்பும். பணத்தை வழங்கும் வங்கி காசோலையில் பணத்தை வழங்கலாம் அல்லது கூடாது என்ற உறுதிப்படுத்தலை வழங்க வேண்டும். இதில், மிக முக்கியமான அம்சமாக இதற்கு காலாவதி நேரம் வரையறுக்கப்பட்டிருக்கிறது.

ரூ.50,000-க்கு அதிகமான தொகை கொண்ட காசோலைகளை கிளியர் ஆக வேண்டிய தேதிக்கு முன்பாகவே, டெபாசிட் செய்ய வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் பரிந்துரைத்துள்ளன. இதன்மூலம், முன்கூட்டியே விவரங்கள் சரிபார்க்கப்படும். விவரங்கள் சரியாக இருப்பின், காசோலை உரிய தேதியில் கிளியர் ஆகிவிடும். ஒருவேளை விவரங்கள் சரியாக இல்லாவிட்டால் கோரிக்கை நிராகரிக்கப்படும். இதனால், காசோலை வழங்குபவர் மீண்டும் சரியான விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in