கொடைக்கானலில் நெய் மிளகாய் வரத்து குறைவு: 120 கிராம் ரூ.250க்கு விற்பனை

கொடைக்கானலில் நெய் மிளகாய் வரத்து குறைவு: 120 கிராம் ரூ.250க்கு விற்பனை
Updated on
1 min read

கொடைக்கானலில் இலங்கை நெய் மிளகாய் ஆப் சீசன் என்பதால் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது. 120 கிராம் ரூ.250-க்கு விற்பனையாகிறது.

இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் கொண்டு வந்த ‘நெய் மிளகாய்’ திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், தாண்டிக்குடி, ஏற்காடு, ஊட்டி மலைப்பகுதி உள்ளிட்ட இடங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டு முழுவதும் இந்த சாகுபடி நடைபெறும். பம்பரம் போன்று தோற்றமளிக்கும் இந்த மிளகாய், நாட்டு மிளகாயை விட காரம் அதிகம் கொண்டது. ஒரு மிளகாய் அதிகபட்சம் 10 கிராம் வரை எடை இருக்கும்.

குழம்பில் போட்டால் நெய் போன்று வாசனை கம கமக்கும். மழைக் காலமே இதன் சீசன். தற்போது கொடைக்கானலில் நெய் மிளகாய் சீசன் இல்லாததால் வரத்து குறைந்து விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஒரு பாக்கெட் (120 கிராம்) ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை சுற்றுலாப் பயணிகள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

இது குறித்து வியாபாரிகள் கூறும் போது, மலைப் பகுதியில் ஒரு சில விவசாயிகள் மட்டுமே நெய் மிளகாய் சாகுபடி செய்கின்றனர். அதனால் எப்போதுமே விலை அதிகமாக இருக்கும். தற்போது சீசன் இல்லாததால் வரத்து குறைந்து, விலை கடுமையாக அதிகரித்துள்ளது. இருப்பினும் சமையலில் இந்த மிளகாயை பயன்படுத்தினால் நெய் ஊற்றியது போல் உணவு ருசியாக இருக்கும். இந்த மிளகாயை ருசி பார்த்தவர்கள் தேடி வந்து வாங்கிச் செல்கின்றனர்” என்று வியாபாரிகள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in