பஹல்காம் பதற்றம் எதிரொலி: சென்செக்ஸ் 1000 புள்ளிகள்; நிஃப்டி 300 புள்ளிகள் சரிவு!

பஹல்காம் பதற்றம் எதிரொலி: சென்செக்ஸ் 1000 புள்ளிகள்; நிஃப்டி 300 புள்ளிகள் சரிவு!
Updated on
1 min read

மும்பை: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றங்கள் முதலீட்டாளர்களின் உணர்வுகளை பாதித்துள்ளதால் வெள்ளிக்கிழமை ஆரம்ப லாபத்தையும் மீறி இந்திய பங்குச்சந்தைகள் சரிவைச் சந்தித்தன. சென்செக்ஸ் 1000 புள்ளிகளும், நிஃப்டி 300 புள்ளிகளும் சரிந்தன.

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் தொடக்க வர்த்தகத்தில் 79,830 புள்ளிகளுடன் சற்று லாபத்துடனேயே தொடங்கின. என்றாலும் வர்த்தக நேரத்தில் 11.30 மணிக்கு 1004 புள்ளிகள் சரிந்து 78,797.39 ஆக சரிந்தது. அதேபோல் தேசிய பங்குச்சந்தையிலும் நிஃப்டி 24.289 புள்ளிகளில் தொடங்கிய நிலையில், வர்த்தகத்தின் போது 338 புள்ளிகள் சரிந்து 23,908 ஆக இருந்தது.

நிதிப்பங்குகளின் வீழ்ச்சி பங்குச் சந்தைகளின் சரிவுக்கு வித்திட்டன. அதானி போர்ட்ஸ், பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டாடா மோட்டார்ஸ், டெக் மகேந்திரா மற்றும் எட்ர்னல் பங்குகள் சரிவைச் சந்தித்திருந்தன.

சர்வதேச பங்குச்சந்தைகளில் சாதகமான சூழல்கள் நிலவிய போதிலும் செவ்வாய்க்கிழமை நடந்த பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் பதற்றம் முதலீட்டாளர்களின் உணர்வுகளை பாதித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

"தற்போது சந்தையில் நேர்மறையான மற்றும் எதிர்மறையான சூழல்கள் நிலவுகின்றன. கடந்த ஏழுநாட்களில் வெளிநாட்டு நிறுவனங்களின் தொடர்ச்சியான கொள்முதலின் மொத்த தொகை ரூ.29,513 கோடியை எட்டியுள்ளது ஒரு நேர்மறையான போக்காகும்.

அதேநேரத்தில் பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதன் விளைவுகளுக்கான, இந்தியாவின் எதிர்வினை ஏற்படுத்தியிருக்கும் நிச்சயமற்ற தன்மையே சந்தையில் நிலவும் எதிர்மறை சூழலாகும்" என்று ஜியோஜித் முதலீட்டு நிறுவனத்தின் தலைமை முதலீட்டு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in