

குமுளி: தேர்வு நேரம் என்பதால் தேக்கடியில் உள்ள பல சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால் சுற்றுலா சார்ந்த வர்த்தகம் வெகுவாயக பாதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தின் தமிழக-கேரள எல்லையில் குமுளி அமைந்துள்ளது. இங்குள்ள தேக்கடி உலகப் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலம் ஆகும். மலைத் தொடர்கள், பள்ளத்தாக்குகள், வனப்பகுதிகள் நிறைந்த இப்பகுதியில் ஆண்டுமுழுவதும் காலநிலையும் இதமாகவே உள்ளது. இதனால் உள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை ஆண்டு முழுவதும் இருந்து கொண்டே இருக்கிறது.
இங்கு வேறு தொழில்களுக்கான வாய்ப்பு இல்லாததால் தனியார் சுற்றுலா தலங்களும் அது சார்ந்த தொழில்களும் அதிகம் வளர்ச்சி அடையத் தொடங்கின. இதன்படி சிப்ஸ், நறுமண, மசாலாப் பொருள் விற்பனை கடைகள் யானைசவாரி, களரி, கதகளி, மோகினியாட்டம், மேஜிக், சாகசநிகழ்ச்சிகள், செயற்கை நீர் ஊற்று, ஆயுர்வேத மசாஜ், ரிசார்ட், உணவகம் என்று முழுவதும் சுற்றுலா சார்ந்த வர்த்தக பகுதியாகவே மாறி விட்டது.
மேலும், சுற்றுலாவை நம்பி வழிகாட்டிகள் மற்றும் வாடகை ஜீப்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டன. தற்போது பள்ளிகளில் தேர்வு நேரம் என்பதால் இங்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாகவே உள்ளது. வடமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து குறைவானவர்களே வந்து கொண்டிருக்கின்றனர். பல இடங்கள் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
இதனால் ரிசார்ட்ஸ், உணவகம் உள்ளிட்ட சுற்றுலா சார்ந்த பல வர்த்தகங்களும் வெகுவாய் பாதிக்கப்பட்டுள்ளது. கடைகளும் வழக்கமான நேரத்தை விட முன்னதாகவே மூடப்படுகின்றன. இதுகுறித்து ஜீப் ஓட்டுநர் மணி என்பவர் கூறுகையில், ''தற்போது குமுளி, தேக்கடியில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே உள்ளது. இதனால் ஜீப் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் முடிந்ததும் ஏப்ரல் 2-வது வாரத்தில் இருந்தும் இந்நிலை மாறும்'' என்றார்.