

மும்பை: ஹிண்டன்பர்க் நிறுவனர் நடே ஆண்டர்சன் தனது ஆய்வு நிறுவனத்தை கலைக்கப்போகும் முடிவினை அறிவித்த சில மணிநேரத்தில் பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் இன்று கடுமையாக உயர்ந்தன. இந்நிறுவனம் அதானி குழுமத்தின் மீது பங்கு முறைகேடு குற்றச்சாட்டை வைத்தது குறிப்பிடத்தக்கது.
தனது நிறுவனத்தினை மூடுவது குறித்து நடே ஆண்டர்சன் கூறுகையில், “நாங்கள் மேற்கொண்டுவந்த திட்டங்கள் நிறைவடைந்துவிட்ட நிலையில் நிறுவனத்தை கலைக்க முடிவு செய்துள்ளோம். எங்களுடைய கடைசி வழக்கான போன்ஸி வழக்கை முடித்துவிட்டோம். அதனை அதிகாரிகளிடம் பகிர்ந்தும் கொண்டோம். அதன்படி, இன்று தான் எங்களின் கடைசி நாள்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கை வெளியான சிலமணி நேரத்தில் அதானி குழுமத்தின் அதானி என்டர்பிரைசஸின் பங்குகள் 4.16 சதவீதம் உயர்வடைந்து ரூ.2,485க்கு விற்பனையானது. அதானி போர்ட்ஸ் பங்குகள்3.16 சதவீதம் உயர்ந்து ரூ.1,172 க்கு விற்பனையானது. அதானி பவர்ஸ் 4.79 சதவீதம் உயர்ந்து ரூ.576க்கு விற்பனையானது.
அதானி எனர்ஜி பங்குகள் 2.5 சதவீதம் உயர்ந்து ரூ.799, அதானி க்ரீன் எனர்ஜி 4.91 சதவீதம் உயர்ந்து ரூ.1086 மற்றும் அதானி கேஸ் 3.8 சதவீதம் உயர்ந்து ரூ.687 விற்பனையானது. குழுமத்தின் மற்ற நிறுவனத்தின் பங்குகள் நேர்மறையில் விற்பனையாகின.
அமெரிக்காவின் பங்கு முதலீடுகள் குறித்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், அதானி குழுமம் பெருநிறுவன நிர்வாக விதிமுறைகளை மீறி, தனது பங்குகளை கையாளுவதற்காக முறைகேடுகள் செய்ததாக கடந்த 2022-ம் ஆண்டு குற்றம்சாட்டியிருந்தது. இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்திருந்த அதானி குழுமம் அவை உள்நோக்கம் கொண்டவை தவறானவை என்று நிகராகரித்திருந்தது.
ஹிண்டன்பர்க் மூடப்படுவது ஏன்?: அதானி குழுமத்தின் மீது 150 மில்லியன் டாலர்கள் முறைகேடு குற்றச்சாட்டு புயலை உண்டாக்கியது முதல் நிகோலா மற்றும் ஈரோஸ் இண்டர்நேஷனல் போன்ற ஜாம்பாவன்களை வீழ்த்துவது வரை ஹிண்டன்பர்க்கின் அறிக்கைகள் பெறும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்தநிலையில் அந்நிறுவனத்தை கலைக்கப்போவதாக அதன் நிறுவனர் நடே ஆண்டர்சன் அறிவித்துள்ளார். ஹிண்டன்பர்க் நிறுவனத்தை மூடுவதற்கான காரணத்தை விளக்கி தனிப்பட்ட குறிப்பு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், "கடந்த ஆண்டு இறுதியில் எனது குடும்பத்தினர், நண்பர்கள், குழுவினரிடம் பகிர்ந்து கொண்ட படி ஹிண்டன்பர்க் நிறுவனத்தை கலைக்க முடிவு செய்துள்ளேன். நாங்கள் வேலை செய்து கொண்டிருந்த திட்டங்கள் முடிந்ததும் இதனைச் செய்யலாம் என்று நினைத்திருந்தோம். சமீபத்தில் நாங்கள் முடித்து அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்ட போன்சி வழக்குகளின்படி எங்களுடைய அந்த கடைசி நாள் இதுதான்.
இந்த முடிவு எந்த வெளிப்புற அழுத்தம், உடல்நல பாதிப்பு, தூண்டுதல்கள் காரணமாக எடுக்கப்படவில்லை. என்னுடைய வாழ்க்கையின் ஒரு அத்தியாயம் இயல்பாக அதன் முடிவுக்கு வந்துள்ளது. நிறுவனத்தின் மீதான எனது தீவிர அக்கறை வாழ்க்கையின் பிற விசயங்களை புறக்கணிப்பதாக இருந்தது. ஆரம்பத்தில் என்னை நிரூபிக்க வேண்டும் என்ற உந்துதலால் அந்தத் தீவிரம் உண்டானது.
காலப்போக்கில் ஹிண்டன்பர்க்கை என் வாழ்க்கையின் ஒரு அத்தியாயமாக மட்டுமே பார்க்கத் தொடங்கினேன். அடுத்த ஆறு மாதத்தில் எங்கள் நிறுவனத்தின் ஆய்வு முறைகளை வெளியிடும் விதமாக ஆவணங்கள், வீடியோக்களை பொதுவெளியில் வெளியிட திட்டமிட்டுள்ளேன். இது மற்றவர்களையும் இதுபோன்ற வேலையைச் செய்யத் தூண்டும் என நம்புகிறேன்.
எங்களின் பணிகளால் சுமார் 100 தனிநபர்கள், ஒழுங்குமுறை அதிகாரிகளால் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை சந்தித்துள்ளனர். இதில் பெரும் பணக்காரர்களும், நிறுவனங்களும் அடங்கும். நாங்கள் அசைத்து பார்க்க நினைத்த நிறுவனங்களை அசைத்துப் பார்த்தோம்.” இவ்வாறு நடே தெரிவித்துள்ளார்.
ஹிண்டன்பர்க் 11 பேர் கொண்ட சிறிய, ஆனால் அர்ப்பணிப்பு கொண்ட நிறுவனமாக செயல்பட்டு வந்தது என்பது கவனிக்கத்தக்கது.