

உதகை: இந்தியாவில் 230 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி தரும் தொழிலாக தேனீ வளர்ப்பு உள்ளது என உதகையில் நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம், நீலகிரி மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் தேசிய தேனீ வாரியம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான தேனீ வளர்ப்பு கருத்தரங்கம் உதகை சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள தோட்டக்கலை வளாக அரங்கில் இன்று (டிச.11) தொடங்கியது. வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா வரவேற்று பேசும்போது, ‘தேனீ வளர்ப்பு நமக்கு இரு வகையான நன்மைகளை நமக்கு தரக் கூடியது. முதலாவது தேனீ வளர்ப்பை நாம் ஒரு தொழிலாக செய்யலாம்.
தேனீ வளர்ப்பின் மூலம் விவசாயத்தை அதிகப்படுத்த முடியும். 130 விதமான பயிர்களில் தேனீயின் மகரந்த சேர்க்கையின் மூலம் விளைச்சல் அதிகரிக்க முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தேனீ வளர்ப்பின் மூலம் ஏற்படும் மகரந்த சேர்க்கையின் மூலம் அதிகமான மகசூலை கொடுக்கிறது. இதன் மூலம் தேன் மூலமாக வருவாய் ஈட்டுவதற்காகவும், பயிர் விளைச்சலை அதிகரிக்கும் மகரந்த சேர்க்கைக்காகவும் என இரு வகை நன்மை கிடைக்கிறது.
தேன் மருத்துவ பொருளாகவும் பயன்படுகிறது. உலகில் பாலுக்கு அடுத்த படியாக அதிகமாக கலப்படம் செய்யப்படும் பொருள் என்றால் அது தேன் தான். பார்த்த உடன் நல்ல தேனா? என்பதை கண்டறிய முடியாது. என்எம்ஆர் எனப்படும் ஆய்வின் மூலம் தேனை பகுப்பாய்வு செய்வதன் மூலம் அதன் சர்க்கரை அளவை கண்டறிவதன் மூலம் அது உண்மையான தேனா?, கலப்பட தேனா? என கண்டறிய முடியும். தேனீ வளர்ப்பினை முறையாக மேற்கொண்டால் மட்டுமே தரமான தேனை உற்பத்தி செய்ய முடியும்.
தேனீ இனங்கள் மற்றும் பராமரிப்பு முறைகள், தோட்டக்கலை பயிர்களில் தேனீ வளர்ப்பின் முக்கியத்துவம், ஒருங்கிணைந்த பண்ணையத்தில் தேனீக்களின் பங்கு, தேனீக்களின் எதிரிகள் மற்றும் பருவம் கால மேலாண்மை முறைகள், தேன் பிரித்தெடுத்தல், பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகிய தலைப்புகளில் தொழில்நுட்ப உரை நடக்கிறது. ஆர்வமுள்ளவர்களுக்கு அனைத்து விதமான உதவிகளும் செய்து தரப்படும்’ என்றார்.
தோட்டக்கலை துணை இயக்குநர் அப்ரோஸ் பேகம் பேசும் போது, ‘தேனீ வளர்ப்பு என்பது ஒரு கலை. மேலும் வடமாநிலங்களில் தேன் உற்பத்தி அதிகளவு மேற்கொள்ளப்படுகிறது. 2 ஆயிரம் தேனீ வகைகள் இருந்தாலும், தேன் உற்பத்திக்கு 7 வகையான தேனீக்கள் தான் உள்ளன. 12,700 விவசாயிகள் தேனீ வாரியத்தில் பதிவு செய்து தேனீ வளர்ப்பை சிறப்பாக செய்து வருகின்றனர். தோட்டக் கலைத்துறை மூலம் 20 ஆண்டுகளாக தேனீ வளர்ப்புக்கு விவசாயிகளுக்கு தேவையான அனைத்தும் செய்து தந்து ஊக்கப்படுத்தி அதிகப்படுத்தி உள்ளோம்.
இந்தியாவில் தேனீ வளர்ப்பு மூலம் 230 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி தரும் தொழிலாக தேனீ வளர்ப்பு உள்ளது. இந்தியாவில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 200 டன் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. இருமல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு தேன் பயன்படுத்தப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் தேன் உலக புகழ்பெற்றது. ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. 100 கிராம் தேனீல் 1272 கலோரி உள்ளது. தினமும் ஒரு ஸ்பூன் தேன் எடுத்து கொள்வது நல்லது. எனவே, தேன் வளர்ப்புக்கு அனைவரும் முன்வர வேண்டும்.
தோட்டக்கலைத்துறை பயிர்களில் காப்பி, கோக்கோ உள்ளிட்ட பயிர்களுக்கு அயல் மகரந்த சேர்க்கை கண்டிப்பாக தேவை. இதற்கு தேனீ முக்கியமாக வேண்டும். தேனீக்களை பாதுகாக்க வேண்டியது அவசியம். தோட்டக்கலைத்துறை மூலம் நடப்பு ஆண்டில் தேனீ குடும்பம், தேனீ பெட்டி, தேன் எடுக்கும் கருவிகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் வட்டார தோட்டக்கலை அலுவலகங்களை அணுகி பயன்பெறலாம்’ என்றார்.
தொடர்ந்து தேனீ வளர்ப்பு கருத்தரங்கம் தொடர்பான புத்தகம் வெளியிடப்பட்டது. இதில், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் கவிதா, கோவை இயற்கை தேனீ பண்ணை ஆனந்த், வேளாண்மை விரிவாக்க இணை பேராசிரியர் ஜெய்ஸ்ரீதர், அருங்காடு கிராமிய அபிவிருத்தி இயக்க இயக்குர் பெருமாள் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.