

புதுடெல்லி: மாதபி புரி புச்இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) தலைவராக உள்ள மாதபி புரி புச் மீது அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியது. அதானி குழுமம் வெளிநாடுகளில் உருவாக்கிய நிறுவனங்களில் மாதபி புச் மற்றும் அவரது கணவர் பங்குகளை வைத்திருந்ததாக குற்றம் சாட்டியது.
இதனால், அதானியின் சந்தே கத்துக்குரிய நிறுவனங்கள் மீது செபி இதுவரை எந்த நடவடிக் கையும் எடுக்காமல் ஆதரவாக செயல்பட்டது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையி்ல் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தங்கள் மீதான குற்றச்சாட்டை செபி தலைவரும் அவரது கணவரும் மறுத்தனர். மேலும், தங்களது வாழ்க்கை மற்றும் நிதி பரிமாற்றங்கள் ஒரு திறந்த புத்தகம் போன்றது என்று அவர்கள் கூறியிருந்தனர். ஆனால், இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நாடாளுமன்ற குழு (பிஏசி) விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ் எம்.பி.யும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளருமான கே.சி.வேணுகோபால் தலைமையிலான நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு முன்பு செபி தலைவர் அக்டோபர் 24-ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க கோரி சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், இதற்கு பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அது அரசியல் ரீதியில் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறி இந்த சம்மனை எதிர்த்து மக்களவை சபாநாயகருக்கு அவர்கள் கடிதம் எழுதினர். ஆனால், அதற்கு பலன் கிடைக்கவில்லை.
இந்த சூழ்நிலையி்ல், பிஏசி விசாரணையிலிருந்து விலக்கு அளிக்க கோரி செபி தலைவர் விடுத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. அதனையடுத்து, அவர் இன்று நாடாளுமன்ற குழு முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார்.