அந்நிய செலாவணி கையிருப்பு ரூ.59.23 லட்சம் கோடியாக உயர்வு

அந்நிய செலாவணி கையிருப்பு ரூ.59.23 லட்சம் கோடியாக உயர்வு
Updated on
1 min read

புதுடெல்லி: நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு புதிய உச்சமாக ரூ.59.23 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் தங்கத்தையும் முன்னணி நாடுகளின் கரன்சிகளையும் இருப்பாக வைத்துக் கொள்வது வழக்கம். இது அந்நியச் செலாவணி எனப்படும். அந்த வகையில், அமெரிக்க டாலர், யூரோ, பவுண்ட் ஸ்டெர்லிங், ஜப்பானிய யென் உள்ளிட்டவற்றை இந்திய ரிசர்வ் வங்கி கையிருப்பாக வைத்துள்ளது.

கடந்த செப்டம்பர் 27-ம் தேதி நிலவரப்படி, இத்தகைய அந்நியச் செலாவணியின் ஒட்டுமொத்த மதிப்பு 704.885 பில்லியன் அமெரிக்க டாலராக (ரூ.59.23 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது. இது இதுவரை இல்லாத புதிய உச்சம்.

இதன்மூலம் 700 பில்லியன் டாலருக்கும் அதிகமாக அந்நியச் செலாவணி கையிருப்பு வைத்துள்ள 4-வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பில் வெளிநாட்டு கரன்சிகளின் மதிப்பு மட்டும் 10.46 பில்லியன் டாலர் அதிகரித்து 616.154 பில்லியன் டாலராக (ரூ.51.77 லட்சம் கோடி) உள்ளது. கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு 2.18 பில்லியன் டாலர் அதிகரித்து 65.79 பில்லியன் டாலராக (ரூ.5.52 லட்சம் கோடி) உள்ளது.

வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் அதிக அளவில்முதலீடு செய்தது உள்ளிட்ட காரணங்களால் அந்நியச் செலாவணி கையிருப்பு மதிப்பு உயர்ந்துள்ளது என்று கரூர் வைஸ்யா வங்கியின் தலைவர் விஆர்சி ரெட்டி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in