

இம்மாதம் 10-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மற்றும் பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உரை நிகழ்த்த உள்ளார். அனைவருக்கும் வங்கிச் சேவை மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக அவரது பேச்சு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு ஆர்பிஐ, செபி ஆகியவற்றின் இயக்குநர் குழு கூட்டத்தில் நிதி அமைச்சர் உரை நிகழ்த்துவது வழக்கமான மரபாகும். தொடர்ந்து இரண்டு நிதி ஆண்டுகளாக நாட்டின் வளர்ச்சி 5 சதவீதத்துக்கும் கீழாக உள்ள நிலையில் நடப்பு நிதி ஆண்டில் வளர்ச்சியை முடுக்கிவிடும் விதமாக ஜேட்லியின் உரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கியின் கடன் கொள்கை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 5) வெளியாக உள்ளது. தொழில்துறையை ஊக்குவிக்க வட்டிக் குறைப்பு நடவடிக்கையை ஆர்பிஐ எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. முன்னதாக ஆர்பிஐ இயக்குநர் கூட்டத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 9) ஜேட்லி உரை நிகழ்த்துவதாக இருந்தது. இது பின்னர் 10-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளை (ஆர்இஐடிஎஸ்), ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு எளிதான கடன் வசதி, கட்டமைப்பு நிதி உதவி உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஜேட்லி உரை நிகழ்த்துவார் என்று தெரிகிறது. பற்றாக்குறையைக் குறைக்க அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளில் ஆர்பிஐ, செபி ஒத்துழைப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பதும் இக்கூட்டத்தில் ஆராயப்படும்.
பட்ஜெட்டுக்கு முன்தினம் வெளியான பொருளாதார ஆய்வறிக்கையில் நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் வளர்ச்சி 5.4 சதவீதம் முதல் 5.9 சதவீதம் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..