“நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கவே ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு” - கவுதம் அதானி

கவுதம் அதானி | கோப்புப்படம்
கவுதம் அதானி | கோப்புப்படம்
Updated on
1 min read

மும்பை: அதானி குழுமத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காகவே வெளிநாட்டு நிறுவனமான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு வடிவமைக்கப்பட்டது. அது முழுவதும் ஆதாரமற்றது என அதானி குழுமத்தின் 32-வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் அதன் தலைவர் கவுதம் அதானி தெரிவித்துள்ளார்.

ஆண்டு பொதுக் கூட்டத்தை முன்னிட்டு பங்குதாரர்களிடம் அவர் பேசி இருந்தார். அப்போது அவர் கூறியதாவது: “வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் ஆதாரமற்ற குற்றச்சாட்டை நாம் எதிர்கொண்டோம். அது நமது பல ஆண்டுகால கடின உழைப்பை கேள்விக்குள் ஆக்கியது. நமது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காகவே ஜோடிக்கப்பட்ட அந்த குற்றச்சாட்டை எதிர்த்து நாம் போராடினோம். நமது அடித்தளத்தை எந்த சவாலும் பலவீனப்படுத்த முடியாது.

நமது அர்ப்பணிப்பு மற்றும் திறன் மீது நம்பிக்கை கொண்டு நாம் செயல்பட்டு வருகிறோம். நமக்கு அதிகபட்ச சேதம் ஏற்படுத்தவும், சந்தை மதிப்பை குறைக்கவும் முயற்சி மேற்கொண்டனர். அந்த கடினமான கட்டத்தில் நமது முதலீட்டாளர்களும் நம்பிக்கை தரும் வகையில் எஃப்.பி.ஓ புரோஸிட்களை நாம் திரும்ப தந்திருந்தோம்” என அவர் தெரிவித்தார்.

அதானி vs ஹிண்டன்பர்க்: கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், அக்குழுமத்துக்கு மிக அதிக அளவில் கடன் இருப்பதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியிட்டது.

பங்கு மதிப்பில் உயர்வைக் காட்டி அதானி குழும நிறுவனங்கள் மிக அதிக அளவில் கடன் பெற்றது, பங்குச் சந்தையில் முறைகேட்டில் ஈடுபட்டது, அதானி குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் போலி நிறுவனங்களைத் தொடங்கி வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டது. இதனால் பெரும் இழப்பை எதிர்கொண்டது அதானி குழுமம்.

இந்நிலையில், ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் என்று கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், செபியின் விதிமுறைகள் குறித்தும், பங்குச் சந்தை கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி சப்ரே தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இக்குழு தனது அறிக்கையை கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அதையடுத்து அந்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்பது கடந்த ஜனவரியில் தெரிந்தது.

இதன் பிறகு அதானியின் சொத்து மதிப்புகள் அதிகரித்தன. தற்போது 106 பில்லியன் டாலர்களை சொத்து மதிப்பாக கொண்டுள்ள அவர் உலகின் டாப் 15 (14-வது இடம்) பணக்காரர்களில் ஒருவராக உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in