உணவு மானியம்: டபிள்யூ.டி.ஓ. பேச்சுவார்த்தையில் தீர்வு: இந்திய வர்த்தக அமைச்சக அதிகாரிகள் நம்பிக்கை

உணவு மானியம்: டபிள்யூ.டி.ஓ. பேச்சுவார்த்தையில் தீர்வு: இந்திய வர்த்தக அமைச்சக அதிகாரிகள் நம்பிக்கை
Updated on
1 min read

செப்டம்பர் மாதம் ஜெனீவாவில் நடைபெற உள்ள உலக வர்த்தக அமைப்புடனான (டபிள்யூ.டி.ஓ) பேச்சுவார்த்தையில் உணவு மானிய விவகாரத்துக்கு தீர்வு எட்டப்படும் என்று வர்த்தக அமைச்சக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மொத்த உணவு உற்பத்தியில் 10 சதவீத அளவுக்கு மானியம் அளிக்க வேண்டும் என்று உலக வர்த்தக அமைப்பு வலியுறுத்தி வருகிறது. அதுவும் இந்த மதிப்பீடானது 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த விலையில் கணக்கிடப்பட்டுள்ளது. 1986-1988-ம் ஆண்டு விலை அடிப்படையில் கணக்கிடக்கூடாது என்றும், இந்த அடிப்படை ஆண்டை மாற்றியமைக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தி வருகிறது.

இந்தியா உணவு மானியத் துக்காக ஒதுக்கும் தொகை 10 சதவீதத்தை விட அதிகமாகும். டபிள்யூ.டி.ஓ. நிபந்தனையை ஏற்றால், அபராதத் தொகையை இந்தியா செலுத்த வேண்டி யிருக்கும். இதனாலேயே இந்தியா இந்த விதிமுறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஏழை விவசாயிகள் மற்றும் ஏழைகளின் நலன் காக்கப்படும்; இதில் ஒருபோதும் டபிள்யூ.டி.ஓ. நிபந்தனைகளை இந்தியா ஏற்காது என்று மத்திய வர்த்தகத்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கெனவே திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். கடந்த ஜூலை 31-ம் தேதி மேற்கொண்ட நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

மானியத்துக்கு நிரந்தர தீர்வு எட்டாதவரையில் இதை ஏற்க இயலாது. தற்போது உள்ள 10 சதவீத மதிப்பீடு தவறான கணிப்பு என்றும் இது ஏழைகள், விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதார விலையில் பெறப்படும் உணவு தானியத்தின் அடிப்படையிலும், அவற்றை குறைந்த விலையில் விற்பனை செய்வதன் அடிப்படையிலும் எவ்வித அபராதமும் இன்றி கணக் கிட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in