

பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) மிகவும் வெளிப்படையான வகையில் செயல்பட வேண்டும் என்றும், பங்குச் சந்தையில் விதி மீறுவோரை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்றும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவுறுத்தியுள்ளார்.
பங்குச் சந்தை வகுத்த விதிமுறைகள் வெளிப்படைத் தன்மையோடு இருக்கவேண்டும்; அத்துடன் சில்லறை வர்த்தகர்கள் எளிதில் முதலீடு செய்யும் வகையில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். சில்லறை முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
சில்லறை முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்குரிய நடவடிக்கை, முதலீட்டாளர் விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஜேட்லி விவாதித்ததாக செபி தலைவர் சின்ஹா கூறினார். பங்குச் சந்தையில் வெளிப்படைத் தன்மை அவசியம் என ஜேட்லி வலியுறுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
ஒற்றைப் பதிவு: பங்குச்சந்தை தரகர்கள் ஒருமுறை பதிவுசெய்தால் அனைத்து பங்குச் சந்தைகளிலும் செயல்படுவதற்கான நிர்வாக அனுமதியை செபி அளித்துள்ளது. பங்குத் தரகர்களுக்கு அளிக்கப்படும் பதிவு எண் அனைத்து பங்குச் சந்தைகளிலும் செயல்படுத்துவதற்கு ஏற்ற வகையில் இருக்கும் என்று சின்ஹா குறிப்பிட்டார்.