ரெப்போ விகிதத்தில் 8-வது முறையாக மாற்றமில்லை: 6.5% ஆக தொடரும் - ரிசர்வ் வங்கி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மும்பை: ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். ஆர்பிஐ நிதி கொள்கைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அவர் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து எட்டாவது முறையாக ரெப்போ விகிதத்தில் ரிசர்வ் வங்கி மாற்றம் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது அவர் கூறியதாவது, “நிதி கொள்கைக் குழு கூட்டத்தில் 4-க்கு 2 என்ற மெஜாரிட்டியில் ரெப்போ விகிதத்தில் மாற்றம் வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரெப்போ விகிதம் 6.5 சதவீதமாகவே தொடரும். அதனால் எஸ்டிஎஃப் 6.25 சதவீதமாகவும், எம்எஸ்எஃப் 6.75 சதவீதமாகவும் தொடரும்.

உலக நாடுகள் நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையில் இந்தியா வளர்ச்சிக் கண்டு வருகிறது. இருந்தாலும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்” என அவர் தெரிவித்தார்.

ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும். ரெப்போ விகிதம் உயரும்போது வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும். இரு மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூடி, ரெப்போ விகிதம் தொடர்பாக முடிவுகள் எடுப்பது வழக்கம். அந்த வகையில் கடந்த 5-ம் தேதி அன்று இந்த குழு கூடியது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in