

நியூயார்க்: பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி நிகேஷ் அரோரா உலகிலேயே இரண்டாவது அதிக சம்பளம் பெறும் சிஇஓவாக புதிய உச்சத்தை தொட்டுள்ளார். இந்தியரான இவர், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, மெட்டா சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க்கை விஞ்சி அதிகம் சம்பளம் பெறுபவராக உயர்ந்துள்ளார் என்று வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் அதிக வருமானம் ஈட்டும் முதல் 10 சிஇஓ-க்கள் பட்டியலை வெளியிட்டுள்ள வால் ஸ்ட்ரீட் ஜேர்னல், அதில் தான் இந்த தகவலை சொல்லியுள்ளது. அதன்படி, இந்தப் பட்டியலில் பிராட்காமின் தலைமை நிர்வாக அதிகாரி ஹாக் டான். நிகேஷ் அரோராவை பொறுத்தவரை 151.43 மில்லியன் டாலரை சம்பளமாக பெற்றுள்ளார். இதன் இந்திய மதிப்பு ரூ.1,260 கோடிக்கும் அதிகம். அதேநேரம், மார்க் ஜுக்கர்பெர்க் 24.4 மில்லியன் டாலரும், சுந்தர் பிச்சை 8.8 மில்லியன் டாலரும் சம்பளமாக பெறுகின்றனர்.
நிகேஷ் அரோரா யார்? - உத்தப் பிரதேசத்தின் காஜியாபாத்தை பூர்வீகமாக கொண்டவர் இந்த நிகேஷ் அரோரா. இவரது தந்தை இந்திய விமானப் படையில் பணிபுரிந்தவர் என்பதால், தனது பள்ளிப்படிப்பை விமானப் படை பள்ளியான டெல்லியில் உள்ள ஏர்ஃபோர்ஸ் பப்ளிக் பள்ளியில் முடித்தார் நிகேஷ். ஐஐடி வாராணசியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படிப்பும், பாஸ்டனில் உள்ள நார்த்ஈஸ்டர் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்தார்.
கூகுள் நிறுவனத்தில் 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை பணியாற்றியவர். பிறகு சாப்ட்பேங்க் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக இருந்தார். சாப்ட்பேங்க் நிறுவனத்தில் இணையும் போது துணைத் தலைவராக இருந்தார். அதன்பின்பு 2015ம் ஆண்டு மே மாதத்தில் தலைவராக பதவி உயர்வு பெற்றார். 35 வருட கால சாப்ட்பேங்க் வரலாற்றில் இந்த பதவி யாருக்கும் வழங்கப் படவில்லை.
2016-ம் ஆண்டு அங்கிருந்து வெளியேறினார். தொடர்ந்து 2018ல் பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ் நிறுவனம் சைபர் பாதுகாப்பில் செயல்பட்டு வரும் நிறுவனமாகும்.