“நான் மிடில் கிளாஸ் குடும்பத்தில் வளர்ந்தவன்” - கேட்ஜெட் குறித்து சிலாகித்த சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை | கோப்புப்படம்
சுந்தர் பிச்சை | கோப்புப்படம்
Updated on
1 min read

கலிபோர்னியா: கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தனது பால்ய நாட்களை நினைவுகூர்ந்துள்ளார். இது கூகுள் நிறுவனத்தை தான் நிர்வகிப்பதில் எந்த அளவுக்கான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறித்தும் அவர் பேசியுள்ளார். ப்ளூம்பெர்க் உடனான நேர்காணலில் அவர் இதனை தெரிவித்தார்.

தொழில்நுட்ப உலகின் சாம்ராட்டாக இயங்கி வருகிறது கூகுள். அதன் தலைமை செயல் அதிகாரியாக இயங்கி வருகிறார் தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை. 51 வயதான அவர் படித்து, வளர்ந்தது தமிழகத்தில்தான். பள்ளிப் படிப்பை தமிழகத்திலும், பட்டப்படிப்பை கரக்பூர் ஐஐடி-யிலும், மேற்படிப்பை அமெரிக்காவிலும் முடித்தவர். கடந்த 2004-இல் கூகுள் நிறுவனத்தில் இணைந்தார். 2015 முதல் சிஇஓ பொறுப்பை கவனித்து வருகிறார்.

“எனது அப்பாவும், அம்மாவும் கற்றலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அது எனக்குள் ஆழமாக பிரதிபலித்தது. அதற்கான தேடலை உணர்ந்தவனாக நான் இருந்தேன். நான் வளர்ந்தது மிடில் கிளாஸ் குடும்பத்தில்தான். கேட்ஜெட்களின் வருகை வாழ்வில் புரிதலை அளித்தது.

எங்கள் வீட்டில் ஐந்து ஆண்டு காலம் தொலைபேசிக்காக காத்திருந்தோம். அது ஒரு சுழலும் டயல் கொண்ட தொலைபேசி. அது எங்கள் வாழ்வில் சில மாற்றங்களை ஏற்படுத்தியது. எங்கள் வீட்டில் முதல் தொலைக்காட்சி வாங்கியதும் நினைவில் உள்ளது. அதன்மூலம் விளையாட்டு போட்டிகள் பார்க்க முடிந்தது.

பள்ளிக்கு நீண்ட தூரம் சைக்கிள் பயணம் செய்வேன். அதில் கியர் இல்லை. கொஞ்சம் மேடாக இருக்கும். பிறகு கியர் சைக்கிள் பெற்றேன். ‘ஆஹா’ என அந்த அனுபவத்தை வியந்தேன். நான் இரண்டுக்குமான வேறுபாட்டை சொல்கிறேன். எப்போதுமே நான் தொழில்நுட்பத்தை சாதாரணமாக எடுத்துக் கொண்டது இல்லை. அது ஏற்படுத்தும் மாற்றத்தில் நம்பிக்கை கொண்டுள்ளேன்” என சுந்தர் பிச்சை கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in