நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு: மே 19-ல் தொடங்க திட்டம்

கப்பல் போக்குவரத்து
கப்பல் போக்குவரத்து
Updated on
1 min read

நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு நாளை (மே.,17) தொடங்க இருந்த கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 14 ம் தேதி பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். பயணக் கட்டணமாக 7,670 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது.

பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால், தொடங்கிய இரண்டாவது நாளே கப்பல் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டு வாரத்துக்கு மூன்று நாட்கள் என மாற்றப்பட்டது. அதன்படி வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாட்களில் மட்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்புக்குப் பிறகும் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லை. இதனையடுத்து கனமழையால் இந்த பயணிகள் கப்பல் சேவை கடந்த ஆண்டு அக்டோபர் 20-ம் தேதியுடன் நிறுத்தப்பட்டது. இத்தகைய சூழலில் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு மீண்டும் மே 11-ம் தேதி கப்பல் சேவை தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது.

ஆனால் மே10-ம் தேதி நாகை துறைமுகம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட கப்பல் வராததால் 17-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி, நாளை தொடங்கவிருந்த கப்பல் போக்குவரத்து சேவை தற்போது 19-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனால் யாழ்ப்பாணம் செல்லவிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் மீண்டும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

அந்தமானில் இருந்து, நாகைக்கு வரவேண்டிய பயணிகள் கப்பல் வரத் தாமதமாவதால் இலங்கை கப்பல் போக்குவரத்து தொடக்கம் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும், பயணச்சீட்டு முன்பதிவு செய்த பயணிகள் வரும் 19-ம் தேதி தங்கள் பயணத்தை மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in