

பழநி: திண்டுக்கல் மாவட்டத்தில் மா விளைச்சல் பாதிப்படைந்துள்ள நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து மாம்பழங்களை வியாபாரிகள் வாங்கி வந்து விற்பனை செய்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் காசா, கல்லாமை, செந்தூரம், மல்கோவா, அல்போன்சா போன்ற மா வகைகள் ஆயிரக்கணக் கான ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகின்றன. குறிப்பாக பழநியில் கொடைக் கானல் மலையடிவாரத்தை ஒட்டியுள்ள பகுதிகளிலும், நத்தம், சாணார்பட்டியிலும் அதிக அளவில் மா விவசாயம் நடைபெறுகிறது. இங்கிருந்து மாம்பழம் வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அதிக அளவில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் வாரம் தொடங்கி ஜூலை வரை மாம்பழ சீசன் இருக்கும். ஆனால், இந்த ஆண்டு மழையின்மை, கடும் வறட்சி மற்றும் பூக்கும் பருவம் தாமதமானதால் மா விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தேன் பூச்சி தாக்குதலால் மாம்பூக்கள் கருகி உதிர்ந்து விட்டன. தற்போது சீசன் தொடங்கிய நிலையிலும் பழநி, நத்தம் பகுதியில் இருந்து மாம்பழங்கள் விற்பனைக்கு வரவில்லை.
இதனால் வியாபாரிகள் வெளி மாவட்டங்களில் இருந்து மாம்பழங்களை வாங்கி வந்து விற்பனை செய்கின்றனர். இதனால் மாம்பழம் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ செந்தூரம் மாம்பழம் ரூ.100 முதல் ரூ.110 வரை விற்பனையாகிறது. உள்ளூர் வரத்து இல்லாததால் விவசாயிகள் மட்டுமின்றி வியாபாரிகளும் பாதிப்படைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், பூக்கும் பருவம் தாமதமாக தொடங்கிய நிலையில் தேன் பூச்சி தாக்குதலால் பூக்கள் அனைத்தும் கருகி விட்டன.
இதனால் காய் பிடிக்காமல் போனது. மேலும் மழையின்மை, கடும் வறட்சி காரணமாக விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி தாமதமாவதால் வியாபாரிகள் வெளியூர்களில் இருந்து மாம்பழங்களை வாங்கி வந்து விற்பனை செய்கின்றனர். பழநி பகுதியில் தற்போது தான் மாங்காய்கள் அறுவடைக்கு தயாராகி வருகின்றன. இம்மாத இறுதி அல்லது மே முதல் வாரத்தில் உள்ளூர் மாம்பழங்கள் முழுமையாக விற்பனைக்கு வரும் என்று கூறினர்.