

சென்னை: ஐசிஎஃப்-ல் சர்வதேச ரயில் பெட்டி கண்காட்சி தொடங்கியுள்ளது. இதில் இந்தியா உட்பட 8 நாடுகளை சேர்ந்த 120 நிறுவனங்கள் தங்களது உபகரணங்களை காட்சிப்படுத்தியுள்ளன.
இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை (ஐசிஎஃப்) சார்பில் அடுத்த தலைமுறை ரயில் பெட்டிகளின் வடிவமைப்பு, தொழில்நுட்ப பகிர்வு குறித்த சர்வதேச கண்காட்சி மற்றும் தொழில்நுட்ப மாநாடு, ஐசிஎஃப் வளாகத்தில் நேற்று தொடங்கியது.
ஐசிஎஃப் பொதுமேலாளர் சுப்பாராவ் தொடங்கி வைத்து கண்காட்சியைப் பார்வையிட்டார். நாளை (மார்ச் 14) வரை நடைபெறும் இக்கண்காட்சியில் மொத்தம் 120 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளைச் சேர்ந்த 120 முன்னணி நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளன. சாதாரண ரயில் பெட்டிகள் முதல், இஎம்யு ரயில்கள், அதிநவீன `வந்தே பாரத்' ரயில்களுக்கு தேவையான சிறிய நட்டுகளில் தொடங்கி, ரயில் பெட்டிகளின் பக்கவாட்டு சுவர்கள், பெரிய அளவிலான உதிரிபாகங்கள் வரை அனைத்தும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல் மாநாட்டில் அடுத்த தலைமுறைக்கான நவீன ரயில் பெட்டிகளை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. கண்காட்சி மற்றும் மாநாட்டை தொடங்கி வைத்து ஐசிஎஃப் பொது மேலாளர் சுப்பாராவ் பேசியதாவது: இந்திய ரயில்வே ஆண்டுதோறும் 5 ஆயிரம் கிலோமீட்டருக்கு புதிய பாதைகளை உருவாக்கி வருகிறது.
இதற்காக ரூ.2.5 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் மெட்ரோ ரயில் கட்டமைப்பு 240 கி.மீட்டரிலிருந்து ஆயிரம் கி.மீட்டராக உயர்ந்துள்ளது, விரைவில் இது 2 ஆயிரம் கி.மீட்டராக விரிவுபடுத்தப்படும்.
‘கவாச்’ போன்ற உள்நாட்டு பாதுகாப்பு அமைப்புகள், ஐஓடி மற்றும் 5ஜி தொழில்நுட்பங்கள் மூலம் ரயில்வே தடம் மாற்றப்பட்டு வருகின்றன. மும்பை - அகமதாபாத் இடையே 250 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில்கள் மற்றும் ஓட்டுநர் இல்லா மெட்ரோ தொழில்நுட்பங்கள் என இந்தியாவின் ரயில்வே எதிர்காலம் மிகப்பிரம்மாண்டமாக அமையவுள்ளது.
இதுவரை 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகளைத் தயாரித்துள்ள ஐசிஎஃப், காற்றாலை மற்றும் சூரிய எரிசக்தி மூலம் 18.65 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்து, தனது சொந்த தேவைக்கும் அதிகமாக பசுமை ஆற்றலைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.