

உத்தமபாளையம்: கூலியாட்கள் பற்றாக்குறை, வெளியூர்களுக்குச் சென்று விட்ட வாரிசுகள் போன்றவற்றினால் வயதான விவசாயிகளால் நேரடி வேளாண்மையில் ஈடுபட முடியவில்லை. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விளைநிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டு வருகின்றன.
தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு அணை மூலம் இருபோக சாகுபடி நடைபெற்று வருகிறது. லோயர்கேம்ப் தலைமதகுப் பகுதியில் இருந்து கம்பம், உத்தமபாளையம், வீரபாண்டி, சின்னமனூர், வீரபாண்டி அருகே பழனிசெட்டிபட்டி வரை 14,707 ஏக்கர் விளைநிலங்கள் இதன் மூலம் பயன்பெற்று வருகின்றன.
மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரம் மற்றும் கேரளாவுக்கு அருகில் அமைந்துள்ள பகுதி என்பதால் பருவமழையும் பொய்ப்பதில்லை. தேவையான பாசனநீர், வளமான மண்வளம் போன்றவற்றினால் இப்பகுதி நெல்விவசாயம் சிறப்பாகவே உள்ளது. இதனால் பலரும் பாரம்பரியமாகவே இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அறுவடைக்கு கூலியாட்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால் கடந்த பல ஆண்டுகளாகவே இயந்திரம் மூலமே அறுவடை நடைபெற்று வருகிறது. மேலும் இளைய தலைமுறையினர் பலரும் படித்து வேறு வேலைக்குச் சென்றுவிட்டதால் நாற்றுப் பாவுதல், நடுதல், களைபறித்தல் உள்ளிட்ட விவசாயத்தின் பலகட்டப் பணிகளுக்கும் முதியவர்களையே சார்ந்து இருக்க வேண்டியதுள்ளது. இதனால் இவர்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. கூடுதல் கூலி, வீட்டில் இருந்து இவர்களை வாகனங்களில் அழைத்து வருதல், முன்பணம் கொடுத்தல், வரையறுக்கப்பட்ட வேலை நேரம் போன்ற நிலை உருவாகி விட்டது.
இருப்பினும் தேவையான நேரத்தில் கூலியாட்கள் கிடைப்பதில்லை. மேலும் விவசாயிகளின் வாரிசுகள் பலரும் படித்து வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் பல்வேறு பணிகளுக்குச் சென்றுவிட்டனர். ஆகவே வயதான காலத்தில் கூலியாட்களும் கிடைக்காமலும், வாரிசுகளும் உடன் இல்லாததால் பல விவசாயிகள் நேரடி விவசாயத்தில் இருந்து விலகிவிட்டனர். தற்போது தங்கள் நிலத்தை குத்தகைக்கு விட்டு அதற்கான வருவாயை மட்டும் பெற்றுக் கொள்கின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ''வளமான விளைநிலம்தான். வாரிசுகள் வெளியூருக்குச் சென்றுவிட்டதாலும், கூலியாட்கள் சரிவர கிடைக்காததாலும் நேரடியாக விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை'' என்றனர்.
குத்ததைக்கு எடுத்து விவசாயம் செய்து வரும் உத்தமபாளையத்தைச் சேர்ந்த ஜோசப் என்பவர் கூறுகையில், ''எங்கள் குடும்பத்தில் பலரும் விவசாய கூலி வேலைதான் பார்த்து வருகிறோம். இதனால் எங்களுக்கு பெரியஅளவில் சிரமம் இருப்பதில்லை. எங்களைப் போன்ற பலரும் கூலியாட்களாக இருந்து குத்தகைதாரர்களாக மாறி உள்ளனர்'' என்றார்.