

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2-ம் போகட் சாகுபடியில் கடந்தாண்டை விட 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு அதிகரித்துள்ளது. மேலும், கூடுதல் மகசூல் கிடைக்கும் என வேளாண் அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கெலவரப்பள்ளி அணை மூலம் 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவும், கிருஷ்ணகிரி அணை மூலம் 9,012 ஏக்கர் பரப்பளவும் பாசன வசதி பெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் டிசம்பர் வரை, முதல்போகப் பாசனத்துக்கும், ஜனவரி முதல் மே மாதம் வரை 2-ம் போகப் பாசனத்துக்கும் தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம்.
இந்நிலையில், நிகழாண்டில் கடந்த நவம்பர் மாதத்தில் அறுவடை முடித்த விவசாயிகள் மழை மற்றும் அணைகளின் நீர் திறப்பை நம்பி எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், பாரூர், கிருஷ்ணகிரி அணையிலிருந்து 2-ம் போகப் பாசனத்துக்காக கடந்த 22-ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதன் மூலம் நேரடியாக 11,409 ஏக்கர் பரப்பளவும், மறைமுகமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவும் பயன்பெறுகிறது. தற்போது, விவசாயிகள் நெல் நடவு, நிலத்தைச் சீர் செய்தல் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது: இது தொடர்பாக விவசாயிகள் சிலர் கூறியதாவது: நிகழாண்டில் வடகிழக்கு பருவ மழை இதுவரை சரியாகப் பெய்யவில்லை. இருப்பினும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெய்த பரவலான மழையால் நீர்நிலைகளில் ஓரளவுக்குத் தண்ணீர் உள்ளதால், 2-ம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என நம்புகிறோம். தற்போது நிலங்களைச் சீர் செய்து நாற்று நடம் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்.
60 டன் நெல் விதைகள்: இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பச்சையப்பன் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட நிகழாண்டில் 2-ம் போக நெல் சாகுபடி பரப்பளவு சுமார் 5 ஆயிரம் ஏக்கர் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது 30 ஆயிரம் ஏக்கராக அதிகரித்துள்ளது.
மேலும், அரசு மற்றும் தனியார் நெல் விதை விற்பனை நிலையங்களில் இதுவரை 60 டன் நெல் விதைகள் விற்பனையாகியுள்ளன. மாவட்டத்தில் செம்மை நெல் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை மூலம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனால், இவ்வாண்டு கூடுதல் மகசூல் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.